படுக்கையறையில் என்னென்ன இருக்க வேண்டும்
வீட்டில் நாம் அதிக நேரம் செலவழிக்கும் இடம் படுக்கையறைதான். நிம்மதியான உறக்கமே அடுத்த நாள் நாம் உழைப்பதற்கான முழுமையான சக்தியைத் தருகிறது. அதனால் படுக்கையறை நாம் ஓய்வெடுப்பதற்கு உகந்த சூழலை உண்டாக்கித் தருவதாக அமைய வேண்டும்.
ஒரு வீட்டில் மிகவும் வசதிகள் நிறைந்த இடமாக அமைவதும் படுக்கையறையே. முதன்மையான படுக்கையறை என்பது அந்த வீட்டின் குடும்பத்தலைவருக்கானது. குழந்தைகளுக்காகவும், விருந்தினர்களுக்காகவும் தனியே படுக்கையறைகளை அமைப்பது இன்று அதிகரித்து வருகிறது.
கடந்த தலைமுறை வீடுகளில் தனியே அறைகள் அமைக்கப்பட்டது வெகு சொற்ப வீடுகளில் மட்டுமே. அந்த வசதியை இன்று பெரும்பாலானவர்கள் இரண்டு, மூன்று படுக்கையறைகள் கொண்ட வீட்டை வடிவமைக்கிறார்கள். குறைந்தபட்சம் இரண்டு அறைகளாவது இருக்குமாறு வடிவமைக்கிறார்கள். மேலும் இந்தப் படுக்கையறைகள் குளியலறையுடன் சேர்த்து அமைக்கப்படுவதும் இன்று அத்தியாவசியமாகிவிட்டது.
என்ன வேண்டும்?
விசாலமான பரப்பளவு கொண்ட அறையுடன் குளியலறை கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வேலை செய்வதற்கான ஒரு மேஜை அமைய உகந்த இடம் வேண்டும். வெளிப்புறம் சென்று பார்ப்பதற்கு வசதியாக ஒரு பால்கனி இருப்பது வெகுசிறப்பு. அங்கு குறைந்தபட்சம் இரண்டு நாற்காலிகள் இடும் அளவுக்கேனும் இடம் இருப்பது நல்லது. கட்டிலிலிருந்து இறங்க இரண்டு புறங்களிலும் வசதியாக இடம் இருப்பது நல்லது.
அறையின் அளவு
10 அடிக்கு 10 அடி அளவில் அமைவது நிச்சயமாக ஒரு சிறந்த படுக்கையறையாக அமையாது. குறைந்த பட்சம் 16 அடிக்கு 12 அடி அளவில் இருப்பது ஓரளவேனும் விசாலமான பார்வையைத் தரும். இந்த அறையின் அளவானது நீள, அகலத்தில் மட்டும் இல்லை, உயரத்திலும் உள்ளது.
பொதுவாக வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தாமல் அமைக்கப்படும் இடங்களிலும் நாம் படுக்கையறையில் பரண் (LOFT) அமைவதை தவிர்க்கும் போது விசாலமான தோற்றத்தை அடைய முடியும். குறைந்த பட்சம் முதன்மை படுக்கையறையிலேனும் பரண் அமைப்பதைத் தவிர்க்கும்படி அன்போடு வலியுறுத்த விரும்புகிறேன்.
வீடு கட்டும்போது அறையின் அளவானது விசாலமாகத் தோன்றும். ஆனால் கட்டில் இட்டபின்பு மிகச்சிறியதாகிவிடும். வாய்ப்பு இருக்கும் இடங்களில் இரண்டு ஜன்னல்களை அமைப்பது சிறப்பு. நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் எந்த அறையையும் வாழத் தகுந்ததாக மாற்றும். விசாலமான தோற்றமும் கிடைக்கும்.
குளிர்சாதன வசதி
இன்று பரவலாக அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி (AIR CONDITIONER) படுக்கையறையிலும் சுடுநீர்க்கலன் (GEYCER) வசதி குளியலறையிலும் அமைக்கப்படுகிறது. இவற்றை உடனே நாம் வாங்கிப் பொருத்தாவிட்டாலும் அவற்றை அமைப்பதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொள்வது சிறப்பு. மின்சாதன வசதிகளை முழுமையாகச் செய்து கொள்வது நல்லது.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குளிர்சாதன அமைப்பின் வெளிப்புறப் பெட்டியை அமைப்பதற்கென தனியே வசதிகள் செய்யப்படுகின்றன. அதைப் போன்றே நம் வீட்டிற்கெனவும் அவற்றை அமைத்துக் கொள்வது சிறப்பு. எந்தச் சுவரில் உட்புறச் சாதனைத்தைப் பொருத்தப் போகிறோம் என்பதைப் பொறுத்து அறையின் உள்ளே மற்ற மின்விளக்குகள் அமையும் இடங்களை முடிவெடுக்கலாம்.
மேலும் குளிர்சாதன அமைப்பின் உள், வெளிப்பகுதிகளை இணைக்கும் தாமிரக் குழாய் செல்ல வசதியாக ஒரு துளை அமைத்து அதைச் செப்பனிட்டு வைத்துக் கொள்வது சிறப்பு. பிறகு அதைப் பொருத்துகையில் வெந்நிற சிமெண்ட்டை வைத்து முறைப்படி இல்லாமல், துளையை ஏனோதானோவென்று அடைப்பதும் பரவலாக நடப்பதை நாம் காணலாம்.
மேலும் குளிர்சாதன வசதி அமைக்கப்படும் போது பரண் மற்றும் அதன் கீழே அமையப்பெறும் துணி மற்றும் பொருட்கள் வைக்கும் இடமும் (WARDROBE) முழுமையாக மூடப்பட வேண்டும். இல்லையேல் கூடுதலாக மின்சாரம் செலவாகும். ஒட்டுப்பலகை (PLYWOOD), மற்ற மாற்றுப் பொருட்கள் கொண்டு நாம் கதவு அமைக்க வேண்டி வரும்.
அறையின் வண்ணம்
முடிந்தவரை வெளிர்நிறத்தில் அறையில் வண்ணமடிப்பது நல்லது. அடர்நிறத்தில் வண்ணம் இருந்தால் அறையின் அளவு மிக சிறியதாகத் தோற்றமளிக்கும். இரண்டு வண்ணங்களில் சுவர்களை அலங்காரப் படுத்துவது பரவலாக வழக்கத்தில் உள்ளது. ஒரே வண்ணத்தில் முழுமையாக அமைப்பது சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.
படுக்கையறையை மேலும் அழகாக்க இன்று பல வழிகள் உள்ளன. வித்தியாசமான மின் விளக்கு வடிவங்கள், அழகிய வடிவமைப்புள்ள படுக்கைகள், வித்தியாசமாக வண்ணம் செய்யும் முறைகள் – எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.