வெறும் சுவர் அல்ல 11: பூச்சு வேலை எப்படிச் செய்வது?
பூச்சு வேலை எதற்கு?
வீட்டின் உட்புறத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும், வெளிப்புறம் மழை, வெயிலிலிருந்து கட்டிடத்தைப் பாதுகாத்து அழகுபடுத்துவதற்காகவும் நம் வீட்டுக்குப் பூச்சு (PLASTERING) தேவைப்படுகிறது. வீட்டின் உட்புறத்தில் பூச்சு வேலை செய்யப்படாமல் வெறும் செங்கல் சுவராகவே உள்ள வீடுகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.
அதற்கென்று உரிய செங்கற்களை வாங்கி முறையாகத் திருத்தமாக வேலை செய்தால் மட்டுமே அப்படி நாம் செயல்படுத்த முடியும். மேலும் மின்சார வேலைகளுக்காகச் செங்கல் சுவரை உடைத்துக் குழாய்கள் பதிக்கும் இடங்களையும் முறைப்படி செம்மைப் படுத்துவது அவசியம்.
கலவை விகிதம் என்ன?
பூச்சு வேலையை நாம் மூன்றாகப் பிரித்துக்கொள்ளலாம். உட்புறப் பூச்சு (Internal Plastering), வெளிப்புறப் பூச்சு (External Plastering), உட்புறக் கூரைப் பூச்சு (Ceiling Plastering). உட்புறப் பூச்சு வேலைக்கு சிமெண்ட் மணல் கலவை 1:5 என்கிற விகிதத்திலும், வெளிப்புறப் பூச்சு வேலைக்கு 1:6 என்கிற விகிதத்திலும் உட்புற கூரைப் பூச்சு வேலைக்கு 1:3 என்கிற விகிதத்திலும் பயன்படுத்த வேண்டும்.
பூச்சு கனம் எது சரி ?
உட்புறப்பூச்சுக்கும் கூரையின் உட்புறப் பூச்சுக்கும் 12 எம்.எம். அதாவது அரை அங்குலத்துக்கு மிகாமல் கலவைக் கனம் இருப்பது சிறப்பு. இந்த அளவைவிட அதிகமாகக் கனம் ஏற்படும் சூழல் வந்தால் இரண்டு முறையாகப் பூச்சு பூசுவதே சரியான முறை. வெளிப்புறப் பூச்சின் கனம் 16 எம்.எம். அளவுக்கு மிகாமல் வருவது ஏற்புடையது. பூச்சுவேலை ஆரம்பிக்கும் முன்பு கனத்தை முடிவு செய்வது மிக அவசியம். டைல் சில்லுகளைச் சுவரில் ஆதாரப் புள்ளிகளாக அமைத்து சுவர் நேராகப் பூசப்படுவதை உறுதிசெய்துகொண்டே வேலையை ஆரம்பிக்க வேண்டும்.
கூரையின் உட்புறம் செய்யப்படும் பூச்சு வேலையில் எந்த ஒரு ஆதாரப் புள்ளிகளையும் இடாமல் பூசுவது பெரும்பாலான இடங்களில் வழக்கமாக உள்ளது. அதைத் தவிர்த்து முறைப்படி செய்வது நல்லது.
செயல்பாட்டு முறை
பூச்சு வேலையின் நிறைவில் சுவரின் தன்மை எப்படி அமைக்கப்படுகிறது என்பதும் கவனிக்கப்படுவது முக்கியம். SPONGE கொண்டு நிறைவு செய்யும் போது அந்தச் சுவர் சொரசொரப்பான தன்மையோடு இருக்கும். முழுமையாக வழுவழுப்பான தன்மையை ஏற்படுத்த சிமெண்ட் பவுடர் தெளித்துத் தேய்க்கும் வழக்கம் பல இடங்களில் உள்ளது. அது தவறான முறை. அப்படிச் செய்வதால் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நாம் வர்ணம் பூசும் வேலையில் பட்டி (PUTTY) பயன்படுத்துவதாக முடிவெடுத்தால் சொரசொரப்பான தன்மையில் பூசி வைப்பதும் ஏற்கக்கூடிய முறைதான்.
காலம் (COLUMN), கட்டு வேலை இணைப்பு இடங்களில் பூச்சில் நாளடைவில் வெடிப்பு ஏற்படும். இதற்கான அறிவியல் காரணம், காலம் மற்றும் கட்டுவேலை இரண்டின் வெப்பத்தால் விரிவடையும் தன்மையின் (THERMAL CO-EFFICIENT) வேறுபாடு ஆகும். இந்த வெடிப்பு ஏற்படாமல் இருக்க கோழி வலையை (CHICKEN MESH) இந்த இணைப்பில் படிய வைத்து அதன் மேல் பூச வேண்டும்.
நீராட்டுதல்
சிமெண்ட் கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுக்கும் நீராட்டுதல் மிக முக்கியமான ஒன்று. சிமெண்ட் கலவையைச் சுவரில் முறைப்படி பூசிய பின்பு உலர்ந்தபின் ஏழு முதல் பத்து நாட்களுக்குக் குறையாமல் நீராட்டுவது மிக அவசியம். எத்தனை நாள் நீராட்டுகிறோம் என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்வதும் நல்லது. பூசிய பின்பு சுவரில் சுண்ணாம்பு அல்லது சாக்பீஸ் கொண்டு அன்றைய தேதியை எழுதி வைப்பதும் நல்ல விஷயம்தான்.
பொதுவான தவறுகள்
ஆதாரப் புள்ளிகள் இல்லாமல் பூச்சு வேலை செய்வதும், கலவை கனத்தைக் கூடுதலாக அமைத்துப் பூசுவதும், சிமெண்ட்டை நேரடியாகச் சுவரில் தூவி தேய்த்து முறைப்படுத்துவதும், சரியான நீராட்டுதல் செய்யாமல் இருப்பதும் – பொதுவாக சிமெண்ட் பூச்சில் ஏற்படும் தவறுகள்.