வெறும் சுவர் அல்ல 16: தரையில் டைல் இடுகையில் கவனிக்க வேண்டியவை
தரைத் தளமிடுவதில் பல முறைகள் உள்ளன. முன்பு சிமெண்ட் தரை அப்படியே பூசிவிடுவார்கள். பிறகு அந்த சிமெண்ட் தரையில் சிவப்பு வண்ணங்கள் பூசி விதவித வடிவங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால் இன்று தரையை நிறைவு செய்ய டைல், மார்பிள், கிரானைட் மட்டுமல்லாமல் மரத்தாலான பலகைகளைக் கொண்டும் தரை விதவிதமாக வடிவமைக்கப்படுகிறது.
டைல் தரை
கிட்டத்தட்ட 80 முதல் 90 சதவீதம் இடங்களில் இன்று தரைக்கு டைல் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்ல முடியும். ஒப்பு நோக்குகையில் விலை குறைவுதான் இதற்கு முக்கியமான காரணம். சதுர அடி 30 ரூபாயில் இருந்து டைல் கிடைக்கிறது. சதுரஅடி 500 ரூபாய்க்கும் அதைவிட அதிகமான விலைக்கும் டைல் கிடைக்கிறது.
எந்த அளவுகளில் நாம் வாங்குகிறோம் என்பதும், எந்த வண்ணக்கலலை, அதன் பளபளப்பு தன்மை ஆகியவற்றைப் பொறுத்து இந்த விலை மாறுபடும். மிகவும் வழுக்கும் தன்மையுடன் உள்ள டைல்களை வீடுகளில் அமைப்பது நல்லதல்ல. இன்று சாதாரணமாக 2 அடிக்கு 2 அடி அளவிலான டைல்கள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இதைவிட அதிக அளவு உள்ள டைல்களை வாங்கிப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாகச் செயல்படுவது அவசியம். கையாளுவதிலும் முறையாக சிமெண்ட் கலவையின் மீது பதிப்பதிலும் சிறந்த தொழில் வல்லுநர்கள் இதற்குத் தேவைப்படுகிறார்கள்.
டைல் பதிக்கும்முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
பொதுவாக நாம் வீட்டில் பூச்சு வேலைகள் முடிந்த பிறகுதான் தரை வேலைக்கு வருகிறோம். ஆனால் நாம் கதவு நிலைகளை முன்பாகவே பொருத்தி விடுகிறோம். அவ்வாறு நிலையைப் பொருத்தும்போது தரைத்தளத்தின் மட்டம் என்ன என்பதை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் நாம் டைல் இட்ட பிறகு கதவுகளைப் பொருத்திச் சரியாகப் பயன்படுத்த இயலும். டைல் மட்டத்தைவிடக் கூடுதல் உயரத்தில் கதவின் கீழ்ப் பகுதி வருவதையும் நாம் ஏற்க முடியாது. எனவே, தரைத்தளத்தின் அளவை முன்பே நிர்ணயிக்க வேண்டியது முக்கியம்.
கட்டுமானம், பூச்சு ஆகிய பணிகள் முடிந்த பிறகே இந்த வேலை செய்யப்படுவதால், கலவையானது தரையில் கொட்டி நன்கு பிடித்துப் போயிருக்கும். இதை உடைத்தோ செதுக்கியோ வெளியேற்ற வேண்டியது அவசியம்.
டைல் மேல்மட்டம் கலவை கனத்துடன் சேர்ந்து மிகவும் கூடுதலாக அதாவது 4 அல்லது 5 அங்குலம் உயரம் வருவதாக இருந்தால் அந்தக் கனத்துக்கு நாம் மொத்தமாகக் கலவையைப் பயன்படுத்தி டைல் இடுவது கூடாது. முதலில் 3 அங்குல உயரத்துக்கு சிப்ஸ் (CHIPS) பயன்படுத்தி கான்கிரீட் இட்டுக்கொள்வது சிறப்பு.
கூடுதல் கனத்துடன் கலவை அமைத்து அதன் மேல் டைல் பதித்தால் சரியாகப் பதியாமல் காற்று இடைவெளி உண்டாகி உட்புறம் வெற்றிடம் ஏற்பட வாய்ப்பு உண்டு. இப்படி வெற்றிடம் இருந்தால் மேற்புறமிருந்து தட்டிப் பார்க்கும் போது அந்தச் சப்த வித்தியாசத்தை உணர முடியும்.
டைல் பதிப்பது எப்படி
1:5 என்கிற விகிதத்தில் சிமெண்ட் மணல் கலவையை உருவாக்கி நன்கு கலந்து பரவலாக இட்டு மட்டப்பலகை கொண்டு நன்கு அடித்து சமப்படுத்தி டைல் இடுவதற்கு முன்பாக சிமெண்ட் நீர்க்கலவையை ஊற்றி, டைல் கற்களைப் பதிக்க வேண்டும். டைல் கற்களின் மேற்புறத்தை நன்கு தட்டி சரியாக அமைய வைத்து காற்று இடைவெளி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
டைல் கற்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. சாயமூட்டும் பொருட்களைப் பயன்படுத்தி அந்த வண்ணங்கள் நமக்கு வருகின்றன. எனவே வண்ண வித்தியாசம் சில கற்களில் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு உள்ளவற்றை அகற்றி விடுவதும் மிக முக்கியம்.
தரையில் பதித்த பின்பு அதை நன்கு காய விட்டு பிறகு அருகருகே உள்ள டைல் கற்களின் இடைவெளிகளை நாம் வெந்நிற சிமெண்ட் கொண்டு கற்களின் வண்ணங்களுக்கேற்ற நிறமிகளைக் கலந்து நிரப்ப வேண்டும். அந்த இடைவெளிகள் தெரியாக வண்ணம் இருக்க இது உதவுகின்றது.
தரையில் டைல் பதித்த பின் அதை ஒட்டிச் சுவரில் குறைந்தது நான்கு அங்குல உயரத்துக்கு ஒட்டுவது உகந்தது. இடத்தைச் சுத்தப்படுத்துவதற்கும் பார்வைக்குச் சிறப்பாக இருப்பதற்கும் இவ்வாறு ஒட்டப்படுவது நல்லது. இது SKIRTING என்று அழைக்கப்படுகிறது. இப்படிச் சுவரில் ஒட்டுகையில் அது சுவரின் மட்டத்தில் ஒட்டப்படுவதும் சிறப்பானது.