சமையலறை எப்படி இருக்க வேண்டும்

வடிவமைப்பு

வீட்டின் வடிவமைப்பைச் சரிவர முடிவுசெய்துவிட்டால் அடுத்தடுத்த வேலைகள் செய்வதற்கு நமக்குத் தனியே ஓர் ஊக்கம் பிறக்கும். நமக்குப் பிடித்ததைப் போல நம் வீடு எப்படி வரப்போகிறது என்கிற சித்திரம் மனத்தில் உருவாகிவிடும். ‘நாம் திட்டமிடவில்லை என்றால் தவறுவதற்குத் திட்டமிடுகிறோம்’ என்று சொல்கிறது ஓர் ஆங்கிலப் பழமொழி.

வீட்டின் ஒவ்வோர் இடத்துக்கும் அடிப்படையிலான முக்கியத்துவம் உள்ளது. அந்த அடிப்படையில் ஒவ்வோர் இடமாக அலசலாம். இந்த வாரம் சமையலறை குறித்துப் பேசுவோம்.

சமையலறை

ஒரு வீட்டின் மிக முக்கியமான அறை, சமையலறை. வீட்டில் நெருப்பு ஏற்படுத்தப்படுவது பிரதானமாக இங்குதான். அங்கத்தினர்கள் அனைவருக்குமான உணவு தயாராவது இங்குதான். வீட்டில் உள்ள ஒவ்வொருவரின் உடல் நலனையும் தீர்மானிக்கும் இடம் இதுவே. நல்ல மனநிலையோடு மனநிறைவோடு பணிபுரியும் இடமாக ஒரு சமையலறை இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

நல்ல எண்ணங்களோடு செய்யப்படும் எந்த வேலையும் நல்ல பலன்களைத் தரும் என்பது இயல்பானது. சமையலறையை மிகச் சிறப்பாக வடிவமைத்து விட்டால் மற்ற இடங்கள் அதற்குத் துணைநிற்கும். வீடு சிறக்கும்.

காற்றோட்டம்

சமையலறை வடிவமைப்பின் அடிப்படைக் கூறுகளை நாம் பார்க்கலாம். இங்கு பிரதானமாக நெருப்பு பயன்படுத்தப் படுவதால் நல்ல காற்றோட்டம் தேவைப்படுவது முதல் அம்சம். இரண்டாவது ஜன்னல்கள். அருகில் உள்ள கட்டிடத்துக்குச் சரியான இடைவெளி இருக்கும்படி பார்த்துக் கொள்வது முக்கியம். காற்று உள்நுழைந்து வெளியே செல்லும்படியாக இடவசதி இருப்பது முக்கியம்.

பொதுவாகவே சமையலறையில் அமைக்கப்படும் ஜன்னல்களின் கீழ்ப்பாகம் மற்ற ஜன்னல்களைவிட உயரத்தில் அமைக்கப்படுகிறது. நின்று சமையல் செய்வதற்கு வசதியாக அடுப்பு வைக்கப்படும் உயரத்தைப் பொறுத்து ஜன்னலின் கீழ்மட்டம் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக வீட்டின் மற்ற இடங்களில் அமைக்கப்படும் ஜன்னல், தரையிலிருந்து இரண்டரை அடி முதல் மூன்று அடியிலிருந்து தொடங்குகிறது.

ஆனால், சமையலறையில் அது நான்கு அடியிலிருந்து தொடங்குவதை நீங்கள் கவனித்திருக்கலாம். காற்று வீசும் போது நெருப்பு அணைந்துவிடாமல் இருப்பதற்காக இந்த உயர வித்தியாசம் தேவைப்படுகிறது.

இவ்விடத்தில் ஒரு முக்கியமான தகவலை உங்களுக்குப் பகிர விரும்புகிறேன். சமையலறையில் அடுப்பு அமையும் தளத்தின் உயரம் பொதுவாக சிலிண்டரை கீழ்ப்புறம் செலுத்தத் தகுந்த உயரத்தில் அமைவது சிறப்பு. பொதுவாக இரண்டரை அடி உயரத்தில் இந்தத் தளம் அமைக்கப்படுகிறது. சமையலறையைப் பயன்படுத்துபவரின் உயரத்தைப் பொறுத்து இந்தத் தளத்தின் உயரத்தை நம் வசதிக்கேற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

வெளிச்சம்

பொதுவாக அக்னிமூலையில் சமையலறை அமைக்கப்படுவது சிறந்தது என வாஸ்து சாஸ்திரத்தில் வலியுறுத்தப்படுகிறது. தென்கிழக்கு மூலை அக்னிமூலையாகும். கிழக்கு நோக்கி அடுப்பு அமைக்கப்படுவது சிறந்ததாகப் பரிந்துரைக்கப்படுகிறது. சமைக்கும் உணவு சுத்தமாகத் தயாரிக்கப்படுவது முக்கியம். எனவே, வெளிச்சம் நிறைந்த பகுதியில் அடுப்பு அமைந்திருப்பது நல்லது.

காலையில் உணவு தயாரிப்பதுதான் முன்பு வழக்கில் இருந்து வந்தது. காலையில் உணவு தயாரித்து அதை நண்பகல் வேளைக்கும் எடுத்துச் சென்று வேலைக்கு நடுவே உணவு உண்டோம். காலை உணவே பிரதானம். அப்படிச் சமைக்கும்போது அதை வெளிச்சம் நிறைந்த சூரிய ஒளி விழக்கூடிய கிழக்குத் திசையில் செய்வது, மின்விளக்குப் பரவலாக இல்லாத தலைமுறைக்கு அவசியமாக இருந்து வந்தது. எனவே கிழக்கு நோக்கி சமைப்பது அவசியமாக இருந்தது. மேலும் சமையலறையானது வீட்டின் ஒரு மூலையில் அமைக்கப்படுவது மிகவும் நல்லது. இருபுறங்களிலிருந்தும் காற்று வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.

குளிர்சாதனப் பெட்டி வேண்டாம்

தீவிபத்து குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில் சமையலறைக்குள் குளிர்சாதனப்பெட்டி (REFRIGERATOR) தவிர்க்கப்படுவது நல்லது. ஒரு வேலை சிறிய அளவில் தீ விபத்து நிகழ்ந்தாலும் THERMOSTAT அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் குளிர்சாதனப் பெட்டி இயங்குவதால் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, உணவு உண்ணும் அறையிலோ ஹாலிலோ நாம் குளிர்சாதனப் பெட்டியை அமைத்துக் கொள்வது நல்லது. மேலும், மின்காந்த அடுப்பு (ELECTRIC STOVE) பயன்படுத்தும்போது செல்போன்களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

கேஸ் சிலிண்டர்கள்

சமையலறைக்குள்தான் கட்டாயம் கேஸ் சிலிண்டர்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தரைத்தளத்தில் கட்டப்படும் வீடுகளில் நாம் சமையலறைக்கு வெளியே எளிதாக அமைத்துக் கொள்ளலாம். வீடு கட்டும்போதே திட்டமிட்டால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒட்டுமொத்தமாக தரைத்தளத்திலேயே கேஸ் சிலிண்டர்களை அமைக்க முடியும். வீட்டு வேலை தொடங்கும் முன் நம் பொறியாளரோடு உரையாடி இதை முடிவுசெய்துகொள்ளலாம்.

-கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Any Queries