குழந்தைகள் படுக்கையறை எப்படி இருக்க வேண்டும்
வீடு கட்டும்போது குழந்தைகளுக்கெனத் தனியாக அறைகள் அமைக்கும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது. இந்தக் குழந்தைகளுக்கான அறைக்குள்ளேயே படிப்பதற்கான ஏற்பாடும் செய்யப்படுகிறது.
படிப்பு அறை எனத் தனி அறை வடிவமைப்பது இதனால் தவிர்க்கப்படுகிறது. தங்களின் பார்வையில்தான் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு வெகுவாகக் குறைந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
குழந்தைகளின் தலையாய வேலை படிப்பது மட்டுமே என்கிற மனோபாவம் சமூகத்தில் முன்பைவிட அதிகமாகிவிட்டதையும் நாம் குறிப்பிடத்தான் வேண்டும். வீட்டின் உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை இன்று தொலைக்காட்சியும் செல்பேசியும் பேரளவு குறைத்துவிட்டதையும் அறிவோம்.
மேலும் குழந்தைகள் ஒரு கட்டத்துக்கு மேல் அப்பா அம்மாவோடு அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்க விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத் தேர்வுகள் மாறி வருகின்றன. மேலும் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், நம் அரிய நேரத்தைக் கபளீகரம் செய்வதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
அறையில் என்ன வேண்டும்?
அடிப்படையில் விசாலமான படுக்கை இங்கு முக்கியத்துவம் இல்லை. புத்தகங்கள் வைக்க அலமாரியும் கணினி முதலியவை வைத்துக்கொள்ள கட்டாயம் ஒரு மேஜையும் வேண்டும். குளியலறை இணைக்கப்பட்டிருப்பது சிறப்பு. குறைந்தபட்சம் 150 சதுர அடி இடம் இருப்பது நல்லது.
இரண்டு குழந்தைகளுக்காகவும் சேர்த்து ஒரே படுக்கை அறை அமைக்கலாம்.
ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப்படும் படுக்கை அமைப்பை நாம் இங்கே பயன்படுத்தலாம். அவர்களின் துணி உள்ளிட்ட பொருட்கள் வைப்பதற்கான முறையான அளவு அலமாரிகள் அமைக்கப்படுவது நல்லது.
என்ன வசதிகள் வேண்டும்?
குளிர்சாதன வசதி, சுடுநீர்க்கலன் வசதி போன்றவற்றை நம்முடைய பொருளாதார நிலைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து வைத்துக்கொள்வது நல்லது. மின்சார வயர் செல்வதற்கான குழாய்கள் மற்றும் சுடுநீர் செல்வதற்கான குழாய்கள் போன்றவற்றை அமைத்துக் கொள்வது சிறப்பு.
இணைய வசதி இன்று மிகவும் அடிப்படையானது. எதிர்காலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இணையம் மூலம் பார்க்கும் தலைமுறை உருவாகும். இணையத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாடு தேவை என்பதற்காக அந்த வசதியை நாம் தடை செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்று இணையம் திறந்துவிட்டிருக்கும் வெளி மிகப் பெரியது. கற்பதற்கான எல்லைகள் மிகவும் விரிவடைந்திருக்கின்றன.
சம வாய்ப்பு நம் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதை இந்த இணைய வசதி உறுதி செய்கிறது என்றே கூறலாம்.
அறையின் வண்ணமும் வசதிகளும்
பள்ளிப் பருவம் வரை குழந்தைகளின் விருப்பத்துக்கிணங்க வித வித வண்ணங்களில் அறையை அலங்கரிப்பது மிகவும் நல்லது. அவர்களுக்கெனத் தனியாக ஒரு அறை, அவர்களின் விருப்பத்துக்கிணங்க ஒரு அறை என்பது அவர்களுக்கு ஒரு தனித்துவ மனப்பான்மையை வளர்க்கும்.
மேலும், அந்த இடத்தைச் சரிவரப் பராமரிப்பது, ஒழுங்குபடுத்திக் கொள்வது போன்ற வேலைகளை அவர்களுக்கு வழங்கும்போது குழந்தைகளின் பொறுப்புணர்வும் வளரும்.
பொதுவாக வீடுகளில் குழந்தைகள் சுவர்களில் கிறுக்கி வைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. அதற்கான ஒரு வெளியை நாம் இந்த அறைகளில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கலாம். சுவர்களில் கறுப்பு வண்ணம் அடித்து அவர்கள் விரும்பியதை எழுதிப்பார்க்க வரைய இடம் தரலாம்.
மேலும் அவர்கள் விரும்பிய வண்ணம் சுவர்களில் வெவ்வேறு படங்களை ஒட்டி வைக்கவும் வசதிகளை ஏற்படுத்தித்தருவது சிறப்பு. ஒவ்வொரு குழந்தைக்குமான தேவை மாறுபாடு உடையது.
இந்த அறை பிரதானமாக அவர்களுக்காகத்தாம் என்பதை நாம் உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வசதிகளை ஏற்படுத்தித்தருவது நல்லது.
தொலைக்காட்சி வசதியை இந்த அறைக்குள் ஏற்படுத்தித்தராமல் இருப்பது நல்லது.
மொபைல் போன், கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதிகள் எந்த வயதில் இருந்து கொடுப்பது என்பது அந்தக் குழந்தைகளின், பெற்றோரின் புரிதலைப் பொறுத்தது.
இது குறித்த ஒரு வழிகாட்டுதல் தேவை என நினைக்கும் பெற்றோர், குழந்தைகளுக்கான உளவியல் மருத்துவரை அணுகுவது நலம் தரும்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@honeybuilders.