வெறும் சுவர் அல்ல 19: கிரானைட் தளம்- சில தகவல்கள்
கிரானைட் எப்படி உருவாகிறது?
மார்பிளைப் போல கிரானைட்டும் இயற்கையாக உருவாவதுதான். ஆனால், மார்பிளைக் காட்டிலும் கூடுதல் ஆழத்தில் கிரானைட் உருவாகிறது. கனன்று எரியும் பாறைக் குழம்புகள் குளிர்ந்து உருவாகும் இந்தப் பாறையின் மூலப்பொருட்களின் தன்மையைப் பொறுத்து வண்ணம், கலவை போன்ற தன்மைகள் உருவாகின்றன.
மிகுந்த அழுத்தம்,வெப்பம் காரணமாக உருவாவதால், மார்பிளோடு ஒப்பிடும்போது கிரானைட்டின் துளைத்தன்மை மிகவும் குறைவு. அதனால் இதன் வலிமையும் கூடுதலாக உள்ளது. கிரானைட் கற்களும் முக்கால் அங்குலம் (18 MM) அளவிலிருந்து தேவைக்கேற்ப கனம் நிர்ணயிக்கப்பட்டுத் தொழிற்சாலைகளில் அறுக்கப்படுகின்றன. மார்பிள் பயன்படுத்தப்படுவதைப் போல இதற்கு எந்தவொரு வரைமுறையும் இல்லை. கிரானைட் கற்களை அனைத்து இடங்களுக்கும் பரவலாகப் பயன்படுத்தலாம்.
வழவழப்பாக்கும் முறை
கிரானைட் கற்கள் தொழிற்சாலைகளிலேயே முறையாக மிகப் பெரிய இயந்திரங்களால் முறையாகத் தேய்க்கப்பட்டு வழவழப்புத் தன்மையை அடைகின்றன. இந்தக் கற்கள் கூடுதல் வலிமையோடு இருப்பதால் மார்பிள் கற்களைப் போல இவற்றை நாம் வீட்டில் தரையில் பதித்த பின்பு பாலிஷ் செய்ய முடியாது. எனவே, இவை பாலிஷ் செய்யப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. இப்படி முறைப்படுத்தப்பட்டு வருவதால் அவற்றின் உண்மையான பிரகாசத் தன்மையை நாம் கண்டு உணர்ந்து வாங்க இயலும். மேலும், நாம் பயன்படுத்த வேண்டிய இடத்தில் கிரானைட் கற்கள் சொரசொரப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும் என எண்ணினால் அதற்குத் தகுந்தாற்போல் சொரசொரப்பான கிரானைட் கற்களும் கிடைக்கின்றன.
கிரானைட் கற்களின் அளவு
டைல்ஸ் கற்களைப் போன்று சிறிய அளவிலிருந்து பெரிய அளவிலும் (உதாரணத்துக்கு 10 அடிக்கு 10 அடி) கிரானைட் கற்கள் கிடைக்கின்றன. இந்தக் கற்களின் அடர்த்தி அதிகம் என்பதால் இவற்றின் அளவு கூடுதலாக அமையும்போது, அதன் எடையும் அதிகமாகும். எனவே, இவற்றை எடுத்து வந்து நாம் வேலை செய்யும் இடத்தில் இறக்கி வைப்பதற்கும் கிரேன் போன்ற உபகரணங்கள் தேவைப்படும். வேலையாட்கள் மிகுந்த கவனத்துடன் அவற்றைக் கையாள வேண்டியதும் அவசியம்.
வண்ணம்
மார்பிள் கற்கள் பொதுவாக வெளிர் நிறங்களிலும் கிரானைட் கற்கள் பெரும்பாலும் அடர் வண்ணத்திலும் இருப்பது இயல்பு. அவற்றின் மூலப்பொருள் வித்தியாசத்தால் இந்த வண்ண வித்தியாசம் ஏற்படுகிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். தீப்பாறைகளே இவற்றின் அடிப்படை என்பதால் ஒளி வீசும் பாறைகளைப் போல, தங்கத் துகள்களைத் தூவி விட்டதைப் போல் பற்பல கண்கவர் வண்ணங்களில் இவை கிடைக்கின்றன.
பொதுக்கூடம் மிகவும் விசாலமாக அமைந்திருந்தால் அங்கு கிரானைட் கற்களைப் பதிப்பது மிகவும் சிறந்தது. டைல்ஸ் கற்களைப் போன்று இடைவெளிகள் தெரியாவண்ணம் நாம் கிரானைட் கற்களைப் பதிக்கலாம். வெவ்வேறு வண்ண வித்தியாச கிரானைட் கற்களைக் கொண்டு நாம் விதவிதமான வடிவங்களைத் தரையில் கொண்டு வரலாம். ஒருமுறை கிரானைட் கற்களைக் கொண்டு நாம் தரை அமைத்துவிட்டால் பிறகு அவ்வப்போது பாலிஷ் செய்ய வேண்டிய வேலை ஏதும் கிடையாது.
தமிழகத்தில் கிரானைட்
தமிழகத்தில் மதுரை, கிருஷ்ணகிரி பகுதிகளில் பரவலாக கிரானைட் பாறைகளை அறுத்து வடிவமைத்து பாலிஷ் செய்யும் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன. இவை இல்லாமல் பொதுவாக அனைத்து ஊர்களிலும் பயன்படுத்த ஏற்ற வகையில் கிரானைட் கற்கள் விற்பனைக்கே உள்ளன.
வித்தியாசமான வண்ணக் கலவையில் பல வண்ண கிரானைட் கற்களைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமிருப்பின் மேற்கண்ட இடங்களில் நாம் சென்று பார்க்கலாம். மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழித்தடத்தில் வரிசையாகக் கடைகள் உள்ளன. அதே போன்று கிருஷ்ணகிரியிலும் தொழிற்சாலைகள் உள்ளன. அதிகமான பரப்பளவில் நாம் கிரானைட் பயன்படுத்துவதாக இருந்தால், உருவாகும் இடத்தில் சென்றால் நல்ல விலைக்கு வாங்க முடியும்.
கிரானைட் பதிப்பித்தல்
மார்பிள் பதிக்க நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்களைப் போன்றே இதற்கும் முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளலாம். சிமெண்ட் கலவையால் ஆன தளத்தை அமைக்கும்போது சரியான மட்டத்தில் இருக்கும்படி தட்டிச் சரிசெய்வது மிக முக்கியம். எடை கூடுதலான பெரிய அளவில் இருக்கும் கற்களை பதிக்கும் போது கலவை கீழிறங்க வாய்ப்பு உண்டு, அதனால் கிரானைட்டுக்குக் கீழே காற்று இடைவெளியும் ஏற்படலாம்.
பெரிய கற்களைப் பதிக்கும்போது ஒட்டுமொத்தமாக கிரானைட் பதிக்கும் விதம் குறித்த வரைபடங்கள் தயாரித்துக் கொள்வது நல்லது. சரியான அளவுகளில் கிரானைட் கற்களை வெட்டி, இடையில் வரக்கூடிய வேறு வண்ண கிரானைட் கற்களையும் வரைபட உதவியோடு சரிவரப் பதிக்கலாம்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு : senthil@s2swebtechnology.com