வெறும் சுவர் அல்ல 14: செண்ட்ரிங்கில் கவனிக்க வேண்டியவை
செண்ட்ரிங் வேலை எதற்கு?
கான்கிரீட் இட்ட பின்பு அது முழுமையாகத் தன் வலிமையை அடையும் காலம் வரை அதைத் தாங்கி பிடிப்பதற்கான ஒரு அமைப்பு தேவை. அது தான் இந்த செண்ட்ரிங் வேலை. மேலே நின்று கம்பி கட்டுவதற்கும் கான்கிரீட் கொட்டும்போது அதன் எடையைத் தாங்குவதற்கும் தகுந்தவாறு இந்தத் தளம் அமைக்கப்பட வேண்டும்,
எந்தப் பொருள் கொண்டு செய்யலாம்?
மரப்பலகை, ஒட்டுப்பலகை அல்லது இரும்பு தகடுகளைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்படுகிறது, தென்னம் பலகை முதற்கொண்டு வெவ்வேறு மரங்களின் பலகைகள் இந்த வேலைக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஒட்டுப்பலகை என்கிற PLYWOOD கொண்டும் பீம், தளம் ஆகியவை அமைக்கப்படுகின்றன. அதிக முறை பயன்படுத்த வாய்ப்பு உள்ள ஒரே அளவான பலகைப் பகுதிகள் தேவைப்படும் இடங்களில் இந்த ஒட்டுப்பலகை கொண்டு செண்ட்ரிங் வேலை செய்யப்படுகிறது, அடுக்குமாடிக் குடியிருப்புகளை ஒத்த கட்டிட வேலைகளுக்கு இது பொருந்தி வரும்,
இரும்பு தகரங்களைக் (SHEET) கொண்டும் மடித்து வடிவமைக்கப்பட்ட இரும்பு வடிவ அமைப்புகளைக் (MOULDED SHEETS) கொண்டும் இந்த அடிப்படைத்தளம் அமைக்கப்படுகிறது, இந்தத் தளத்தைத் தாங்கி பிடிப்பதற்கு மரம் அல்லது இரும்புக் கம்பிகள் (STEEL POSTS) பயன்படுத்தப்படுகின்றன,
தளத்தைத் தாங்கி பிடிக்கும் மரங்கள் நேராக இருப்பதை உறுதிப்படுத்துவது மிக அவசியம். அவை சாய்வாக அமைக்கப்பட்டால் கான்கிரீட் இடும்போது சரிந்து விழ வாய்ப்பு உள்ளது, இந்த மேல் தளத்தில் நாம் பயன்படுத்தும் பொருட்களைப் பொருத்து இடைவெளிகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது, அப்படி உண்டானால் அதன் வழியே கான்கிரீட் வழிய வாய்ப்பு உள்ளது, அதைத் தவிர்ப்பது அவசியம். இந்த மெல்லிய இடைவெளியை அடைக்கக் காகித அட்டை, வாழை மட்டை போன்றவை பொதுவாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன, மாட்டுச் சாணம் கொண்டு மெழுகுவதையும் நாம் சில இடங்களில் பார்க்கலாம்.
பாய் விரிக்கலாமா?
சில இடங்களில் கம்பி கட்டுவதற்கு முன்பாக செண்ட்ரிங் அமைத்த தளத்தில் பாய் விரிப்பதை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு, அப்படிப் பாய் விரிப்பதன் மூலம் சிமெண்ட் நீர் கலவை வழிந்தோடாமல் இருக்க வாய்ப்பாக இருக்கும் என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. மேலும் கான்கிரீட் இட்டு செண்ட்ரிங் பலகைகளைப் பிரித்த பின் மேற்கூரையின் கீழ்பக்கம் சொரசொரப்பாக இருப்பதன் மூலம் அந்தப் பாகத்தை பூசுவதற்கு முன் சிறிதாகக் கொத்த வேண்டியதன் (HACKING) அவசியமும் இல்லாமல் இருக்கும் என்ற எண்ணமும் பரவலாக உள்ளது.
ஆனால், கான்கிரீட் ஆனது தனது முழுமையான வலிமையை அடைய நீர் சிமெண்ட் விகிதம் எவ்வளவு முக்கியமானது என்பது முந்தைய கட்டுரையில் நாம் பார்த்திருக்கிறோம். கோரைப்பாய் கான்கிரீட்டின் ஈரத்தன்மையை உரிஞ்சி விடும். மேலும் இந்தப் பாய் கான்கிரீட்டின் உள்ளே சென்று சிக்கிக் கொள்ளும் சிக்கலும் உள்ளது. இதனால் கீழ்ப்புறத்திலிருந்து அந்த உள் சென்ற பகுதிகளை உடைத்து எடுக்கும் சூழலும் உருவாகிறது. இந்தக் காரணங்களால் நாம் இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது.
பிளாஸ்டிக் பேப்பர்களை விரிக்கலாமா?
இந்தப் பாய் விரிக்கும் வழக்கத்தைப் போலவே பிளாஸ்டிக் பேப்பர்களை விரிக்கும் வழக்கமும் உள்ளது. கம்பி வேலை செய்யும் போது அவை கிழிந்து போகவும் வாய்ப்பு உள்ளது. அதுபோல கான்கிரீட்டிலும் அவை உள்ளே சென்று விடவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் எப்படிப்பட்ட மேற்புறமாக இருந்தாலும் கான்கிரீட் இடுவதற்கு முன்பு நீர் தெளித்து அந்தப் பகுதியில் எந்தவிதமான குப்பைகளும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் நீர் தெளிப்பதன் மூலம் நாம் பயன்படுத்தும் பலகை உள்ளிட்ட மற்ற பொருட்களில் கான்கிரீட் கலவையின் ஈரத்தன்மை உரிஞ்சப்படாமல் நாம் பார்த்துக்கொள்ள முடியும்.
பலகையோ இரும்பு தளமோ எந்த மேற்புறமாக இருந்தாலும் அதன் மேல் வழவழப்புத் தன்மைக்காக க்ரூடு ஆயில் (CRUDE OIL) அடிக்கப்படுகிறது. இதனால் கான்கிரீட் அதன் மேல் ஒட்டாமல் இருக்கும். மேலும் அந்தப் பலகை, இரும்பு தகரங்கள் ஆகியவை நாட்பட உழைக்கும்.
செண்ட்ரிங் பலகைகள் பிரிப்பது எப்போது ?
உரிய கால கட்டத்திற்கு பிறகே இந்த செண்ட்ரிங் பலகைகளை நாம் பிரிக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 நாட்களிலிருந்து 21 நாட்கள் வரை இந்தப் பலகைகள் அதன் இடத்திலே இருக்க வேண்டும். நம்முடைய வீட்டில் இடம்பெறும் அறைகளைப் பொறுத்து இந்த நாட்கள் அளவு மாறுபடும். இடைவெளி (SPAN) அதிகமாக இருக்கும் பட்சத்தில் நாட்கள் அளவு கூடும்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com