வெறும் சுவர் அல்ல 17: எப்படி அமைக்கலாம் குளியலறை டைல்?
பொதுவாக வீட்டின் அனைத்து இடங்களில் தளம் அமைப்பதற்கும் நீர் புழங்கும் இடங்களான குளியலறை, சமையலறை ஆகிய இடங்களில் தளம் அமைப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தொடர்ந்து நீர் இருக்கக்கூடிய இடங்களில் பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற காரணங்களுக்காக இதில் தளம் அமைக்கத் தனிக் கவனம் எடுக்க வேண்டும்.
குளியலறை டைல்
இன்றைய சூழலில் பொதுவாகக் குளியலறையுடன் சேர்ந்து கழிப்பிடமும் அமைக்கப்படுவது பரவலாக வழக்கத்தில் உள்ளது. வெறுமனே கழிவறை மட்டும் உள்ள அறைகளில் சுவரில் டைல் 3 அடி வரை உயரம் மட்டும் பதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால், குளியலறையில் கட்டாயம் 7 அடி உயரம் அல்லது கதவு மேல்மட்டம் வரை டைல் அமைப்பது சிறந்தது.
இவ்வாறு டைல் ஒட்டப்படாத சுவர்ப் பகுதிகள் எவ்வாறான தோற்றத்தைக் காலப்போக்கில் அடைகின்றன என்பதைப் பார்த்தவர்களுக்கு இதன் அவசியம் புரியும். மேலும், வெளிர் நிறம் கொண்ட டைல்ஸ் அமைத்தால் அதைத் தொடர்ந்து பராமரித்து வருவதும் அவசியம். எனவே, சற்று அடர் நிறங்களில் அமைப்பது நல்லது. இன்றைய சந்தையில் குளியலறைக்கான சுவர் டைல் விதவிதமான வண்ணக் கலவையில் கிடைக்கின்றன. கீழ்ப்புறம் அடர் நிறமும் மேல்புறம் வெளிர் நிறமும் கொண்ட சிறந்த வடிவமைப்புகளைக் கொண்ட டைல் கற்கள் கிடைக்கின்றன.
இந்தக் கற்கள் பலவிதமான அளவுகளில் கிடைக்கின்றன. முன்பு 12/8 அங்குல அளவிலான கற்கள் மட்டுமே கிடைத்தன. இன்று பெரிய அளவுகளிலும் கிடைக்கின்றன. அவற்றின் வடிவமைப்பிலும் வண்ணக் கலவையிலும் மிகவும் வித்தியாசமான அற்புதமான அமைப்புகள் கிடைக்கின்றன.
தரைப்பகுதி
குளியலறையின் தரைப்பகுதியில் பயன்படுத்தக்கூடிய டைல் சொரசொரப்பான மேற்பகுதியைக் கொண்டிருப்பது நல்லது. சுவர்க் கற்களின் வண்ணங்களுக்கேற்ற பொருத்தமான வண்ணத்துடன் கூடிய சொரசொரப்பான டைல் கற்கள் கிடைக்கின்றன. பெரும்பாலும் 1 அடிக்கு 1 அடி என்ற அளவில் இவை கிடைக்கின்றன. இந்த டைல் கற்களுக்குப் பதிலாகச் சுற்றுச்சுவர் அமைக்கப் பயன்படுத்தக்கூடிய வழுவழுப்பு இல்லாத பாறைக்கற்களும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
சமையலறை
பொதுவாகச் சமையலறைகளில் பொதுக்கூடம், படுக்கையறை போன்ற இடங்களில் பயன்படுத்தும் டைலே பதிக்கப்படுகிறது. சிலர் மட்டும் குறிப்பாக சமையலறைகளில் சொரசொரப்பான கற்களைத் தேர்ந்து பதிக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நம்முடைய விருப்பம் சார்ந்தது.
சமையலறைச் சுவர்களில் சமையல் மேடைக்கு மேல் குறைந்தபட்சம் 2 அடி முதல் 4 அடி உயரம் வரை நாம் ஒட்டலாம். இங்கும் அடர் வண்ணக் கற்களைப் பயன்படுத்துவது நல்லது. வெளிர் நிறக் கற்களைப் பயன்படுத்துகையில் பராமரிப்பு ஒரு முக்கியக் கவனம் பெறுவதாக அமைகிறது.
இது மட்டும் அல்லாது உணவுக்கூடம் அருகே நாம் வாஷ் பேசின் அமைத்தால் அதை ஒட்டிய சுவர்ப்பகுதிகளில் கட்டாயம் டைல் ஒட்டிவைப்பது நலம் பயக்கும். அதைப் போன்றே வாஷிங் மெஷின் மட்டும் அமைந்திருக்கும் இடங்களிலும் சுவர்ப் பகுதிகளில் அந்த இடங்களைப் பொறுத்து டைல் பதிப்பதைப் பரிசீலிக்கலாம்.
இரண்டு விதமான கற்கள்
இரண்டு விதமான அடிப்படை வித்தியாசம் இந்த டைல் கற்களில் உள்ளன. ஒன்று செராமிக் மற்றொன்று வெட்ரிபைடு. இந்த முதல் வகையான செராமிக் கற்களில் களிமண்ணின் பங்கு அதிகம், மேலும், இது ஒப்பு நோக்குகையில் அதிகம் துளைத்தன்மை கொண்டது. எனவே, நீர் உரிஞ்சும் தன்மை அதிகம். வலிமையும் சற்றுக் குறைவானதே.
இதன் நீர் உறிஞ்சும் தன்மையை மனத்தில் கொண்டு இந்தக் கற்களைப் பதிக்கும் முன்பு நீரில் மூழ்க வைத்துப் பின்பு பயன்படுத்த வேண்டியது அவசியம். அவ்வாறு செய்யாவிட்டால், கலவையில் உள்ள நீர்த்தன்மையைக் கற்கள் உறிஞ்சிவிடக் கற்களின் ஒட்டும் தன்மை குறைந்து டைல் விரைவாகப் பெயர்ந்துவிடும் வாய்ப்பு அதிகம்.
வெட்ரிபைடு டைல் ஒப்பு நோக்குகையில் விலை சற்று அதிகமானது. அதற்கேற்ப அதன் தரம், வலிமை உள்ளிட்ட அடிப்படைப் பண்புகளில் உயர்ந்து நிற்கிறது. தரைக்கு இந்த வகைக் கற்களைப் பயன்படுத்துவது சிறந்தது.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com