வெறும் சுவர் அல்ல 03: வீடு வடிவமைப்பில் அடிப்படை விதிகள்

நம்முடைய ஆசைக்கும் நிதிநிலைக்கும் ஏற்ப வீட்டை வடிவமைக்க வேண்டியதன் அடிப்படையைப் பற்றிக் கடந்த வாரங்களில் பார்த்தோம். எப்படிப்பட்ட அளவிலான வீடாக இருந்தாலும் அந்த வீடு வடிவமைப்பில் நம் கட்டாயம் கவனித்தாக வேண்டிய அடிப்படையான இரண்டு விதிகளை நாம் பார்க்கலாம்.

மழை, வெயில், குளிர் போன்ற இயற்கைச் சூழல்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டு பாதுகாப்பாக இருப்பதற்கே நமக்கு வீடு தேவையாகிறது. இந்த அடிப்படையில் சிந்திக்கும் போது வீடு என்பது வெறும் சுவர்களுக்கு இடையேயான பகுதி மட்டும் அல்ல என்பது நமக்கு விளங்கும். இயற்கையாகக் கிடைக்கும் வெளிச்சமும் காற்றோட்டமும் தங்கு தடையில்லாமல் நம் வீட்டுக்குள்ளும் வர வேண்டும். அது மிக முக்கியம்.

காற்று வரும் வீடு

பகல் நேரத்திலும் வீட்டுக்குள் மின் விளக்கின் தேவையிருப்பதும், போதுமான காற்றோட்டம் இல்லாமல் மின்விசிறியைச் சுழல விட வேண்டிய தேவை ஏற்படுவதும் ஒரு நல்ல வீட்டுக்கு அழகல்ல. முற்றம், திண்ணை போன்ற அமைப்புகளோடு கட்டப்பட்ட நம் வீடுகள் எப்போதும் மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க வல்லவை.

பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திக் எனும் நண்பர் அவருடைய வீட்டு வேலைகளைத் தொடங்கும் முன், வீட்டு வடிவமைப்பில் ‘நடு முற்றம்’ (Central Courtyard) கட்டாயம் வேண்டும் என்று விரும்பினார். இன்றைய நவீனச் சிந்தனையுடன் வீடு வடிவமைக்கும்போது முற்றம் ஓர் இடைஞ்சலாகவே உள்ளது. ஆயினும் வீடு எனும் அனுபவத்தை அது முழுமையாக்குகிறது என்பதுதான் உண்மை.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மனை விலையைக் காணும்போது அதை முழுமையாகப் பயன்படுத்தி முடிந்தவரை பெரிய வீடாகக் கட்டிவிட வேண்டும் என்ற முனைப்பு நமக்குத் தோன்றுவது இயற்கை. வீட்டின் வெளிப்புறச் சுவரைச் சுற்றிக் குறைந்தது மூன்று அடி விட்டுக் கட்டும்போது நாம் எதிர்பார்க்கும் காற்றும் வெளிச்சமும் கிடைக்க நல் வாய்ப்பு உள்ளது. நம் மனையின் முழு அளவுக்கும் சுவர் அடைத்துப் பெரிதாக வீடு கட்டிக்கொண்டு, ஜன்னல் வைக்க வழியில்லாமல், வெளிச்சம் வர வழியில்லாமல் வாழ்வது சிறை வாழ்வுக்கு ஒப்பாகும்.

மேல்தளத்தில் வீடு கட்டி வாடகைக்கு விடப் போகிறோமா என்பதை வீடு வடிவமைப்பை உருவாக்குவதற்கு முன்பே தீர்மானிக்க வேண்டியது அவசியம். இந்தச் சிந்தனையின் தெளிவு நமக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். இரண்டு மூன்று அடுக்காகக் கட்டப்பட்ட வீடுகளிலும் முற்றம் இருக்கும்படி கட்டப்பட்ட பழங்காலத்து வீடுகளை நாம் பார்க்க முடியும்.

இன்றைய நவீனக் கட்டுமான வசதிகளைப் பயன்படுத்தி நாம் விரும்பியபடியான அமைப்புகளைக் கொண்டு வருவது மிக எளிது. நம்முடைய மனையின் அளவு, திசை, தேவைகள் ஆகியவற்றைத் தெளிவாக உணர்த்திய பிறகு, இன்றைய கட்டுமான உலகின் புதிய உத்திகளை/வசதிகளைப் பற்றி நன்கு அறிந்த ஒரு தேர்ந்த வடிவமைப்பாளர் ஓர் அற்புதமான வடிவாக்கத்தை நமக்கு அளிப்பார்.

பல லட்சங்கள் செலவழித்து வீடு கட்டப்போகும் நாம் அதை வடிவமைக்கும் மிக முக்கியமான வேலையை ஒரு தேர்ந்த வடிவமைப்பாளரிடம் (Planner) கொடுக்க வேண்டும். சில ஆயிரங்களை மிச்சப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, நாமே ப்ளான் போடுவதோ ஏதோ ஒன்று போட்டுக் கொடுங்கள் என்று நம் ஒப்பந்தக்காரரிடம் சொல்வதோ முறையல்ல.

நம் மனை அமைந்த திசைக்கேற்ப வீட்டில் காற்று உட்புகுந்து வெளியேறும் வழி, இயற்கையான சூரிய வெளிச்சம் வீட்டில் கிடைக்கும் பாங்கு, தரைத்தள அளவைப் பொறுத்த வீட்டின் உட்புற உயரம் (Ceiling Height), முழுப் பகுதியையும் பயன்படுத்திக்கொள்ளுதல், சுவர்களுக்கு வெளியேயுமான வீட்டு அனுபவம் உள்ளிட்ட பல அம்சங்களை வீட்டு வடிவமைப்பு கொண்டிருக்க வேண்டும்.

– கட்டுரையாளர், கட்டுமானப் பொறியாளர்
தொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Any Queries