வெறும் சுவர் அல்ல 22: வேலையாட்களைத் தேர்வு செய்வது எப்படி

வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளில் பணம், கட்டுமானப் பொருட்கள் ஆகியவை குறித்துப் பேசினோம். இந்த வாரம் வேலையாட்கள் குறித்துப் பார்ப்போம். நாம் எவ்வளவு விலை அதிகமான பொருட்களை வாங்கினாலும் அவற்றைச் சரியாகப் பயன்படுத்தாவிட்டால் அந்தப் பொருளால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு. “அந்த விலை மதிப்பான பொருளை யார் கையாளப் போகிறார்கள்?” என்பது கட்டுமானத்தில் முக்கியமான கேள்வி.

தொழில்திறன் மிக்கவரா?

இல்லாதவர்கள் (UNSKILLED LABOUR). வீடு கட்டுவதில் உள்ள அனைத்துவிதமான வேலைகளிலும் உள்ள தொழில்நுட்பக் கூறுகள் அனைத்தையும் கட்டுநர் தெரிந்துவைத்திருப்பதும் அந்தந்த நேரத்தில் வேலையாட்களிடம் அதை வலியுறுத்தி வேலை வாங்குவதும் நடைமுறையில் சாத்தியமல்ல. எனவே, அந்தத் துறைசார் அனுபவ அறிவு, தொழில்நுட்ப அறிவு ஆகிய இரண்டும் உள்ளவர்களை பயன்படுத்துவது சிறப்பு.

வீடு என்பது நாம் தொடர்ந்து பயன்படுத்தப் போகும் அமைப்பு. தொடர் பயன்பாட்டால் ஏற்படும் பிரச்சினைகள், பராமரிப்புக் கூறுகள் குறித்த அனுபவ அறிவு நமக்கு மிகவும் முக்கியம். நமக்குத் தெரிந்தவர் என்ற அடிப்படையில் மட்டுமல்லாது தொழில் திறன் மிக்கவர் என்கிற அடிப்படையிலும் நாம் வேலை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் இரண்டு வகை

இரண்டு விதமான அடிப்படைகளில் இன்று நாம் வீட்டு வேலைக்கு ஆட்களை நியமிக்கலாம். ஒன்று ஒட்டுமொத்தமாக சதுர அடிக்கு இவ்வளவு ரூபாய் என்கிற கணக்கில் பேசிக்கொள்ளும் முறை (TOTAL CONTRACT). மற்றொரு விதத்தில் நாம் பொருட்களை வாங்கிக் கொடுத்து வேலையை மட்டும் செய்து தருவதாகப் பேசிக்கொள்ளும் முறை (LABOUR CONTRACT).

ஒவ்வொரு வகையின் சாதக, பாதகங்கள் குறித்துத் தெளிவாக அறிந்து நம்முடைய பலம், பலவீனம் குறித்து அலசி ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும்.பொருட்களை நாம் வாங்கிக் கொடுப்பதாக முடிவெடுத்துவிட்டால் சரியான பொருட்களைச் சரியான விலையில் சரியான நேரத்தில் வாங்கிக் கொடுப்பது நம் கடமையாகிவிடும். அதற்கு உரிய நேரம் நம்மிடம் உள்ளதா என்பதை முன்னமே யோசித்து முடிவெடுப்பது முக்கியம். இந்த முறையில் நாம் பணத்தை மிச்சப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் ஆட்களை வைத்து வேலையைச் செய்து தரும் ஒப்பந்ததாரர்களின் அனுபவம், தொழில்நுட்ப அறிவு குறித்தும் நாம் சரிவரக் கணிக்க வேண்டும்.

ஒட்டு மொத்தமாக வேலையை ஒப்படைக்கும் பட்சத்தில் சரியான பொருட்களை வாங்கி பயன்படுத்துவரா என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் நாம் கொடுக்கும் பணத்தை முறையாகச் செலவுசெய்து நம்முடைய வீட்டை விரைவாக முடித்துத் தருபவரா என்பதையும் பார்க்க வேண்டும்.

இரண்டு விதங்களிலும் நாம் ஒருவரை முடிவுசெய்யும் முன்பு அவர் இதற்கு முன்பு முடித்துக் கொடுத்த வீட்டுக் கட்டுமானத்தையும், கட்டிவரும் கட்டுமானத்தையும் சென்று பார்த்து அவற்றின் தரம் குறித்து நாம் ஒரு முடிவுக்கு வரலாம். மேலும் வீட்டு உரிமையாளர்களிடமும் நாம் பேசி உரிய நேரத்தில் வேலையை முடிக்கும் தன்மை குறித்து அறிந்து கொள்ளலாம். அருகில் உள்ளவர்களிடமும் விசாரித்துத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ என்று சொல்வார்கள். நம்முடைய பெண்ணுக்குச் சரியான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுப்பதைப் போன்றதுதான் சரியான ஒப்பந்ததாரரைக் கண்டுபிடித்து வேலையை ஒப்படைப்பதும். ஏனென்றால் நம்முடைய மன நிம்மதியை நாம் அவர்களிடம் விட்டு விடுகிறோம். ஏதேனும் சரிவர நடைபெறாவிட்டால் பல மனச் சங்கடங்களை அடைய நேரிடும்.

வீடு முழுக்க முழுக்க நம்முடைய மன மகிழ்ச்சிக்காகவும் சமுதாய அந்தஸ்துக்காகவும் கட்டிக் கொள்கிறோம். அந்த வேலையோடு நாம் உணர்வுரீதியாக கலந்திருக்கிறோம். அதில் எற்படும் சிறிய குறைகூடப் பெரும் சலனத்தை ஏற்படுத்தும். சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்லிவிடுவார்களோ என்கிற பதற்றத்துடனே வீடு கட்டும் பலர் இருப்பதை நீங்கள் பார்த்திருக்க முடியும். எந்த மனநிலை சரி, தவறு என்று விவாவதிப்பதைக் காட்டிலும் சரிவரக் காரியம் நடப்பதே முக்கியம் என்பதை மனதில் இருத்தி நாம் முடிவெடுக்க வேண்டும்.

கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@honeybuilders.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *