மனையின் விளிம்புவரை வீடு கட்டுவது சரியா

மனையைச் சுற்றி தகுந்த அளவு இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று அரசு விதிமுறை உள்ளது. தகுந்த இடைவெளி விட்டு நாம் வீட்டின் சுவரை அமைக்கும்போது அதற்கு ஏற்றாற்போல் காற்று, வெளிச்சம் ஆகியவை நமக்குக் கிடைக்கும்.

ஆயினும், சில இடங்களில் மனையின் விளிம்பை ஒட்டி வீடுகள் கட்டப்படுவதை நாம் பார்க்கிறோம். அரசு விதிமுறைப்படி இவை ஏற்கப்படுவதிற்கில்லை என்பதை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

ஆயினும், பல சூழ்நிலைக் காரணங்களை முன்னிட்டு இப்படிக் கட்டிடங்கள் கட்டப்படுவது வழக்கத்தில் உள்ளது. இப்படி ஒட்டிக் கட்டப்படுவதில் உள்ள சாதக பாதகங்கள் மற்றும் கட்டுமானம் தொடர்பான அறிவுறுத்தல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

சாதக பாதகங்கள்

ஒட்டிக் கட்டுவதால் நமக்கு வீட்டின் உள்ளே கூடுதலாக இடம் கிடைக்கிறது. அறைகள் விசாலமாக அமைக்கப்பட ஏதுவாகிறது. வாடகைக்கு விடுவதற்காக வீடுகள் கட்டப்படும்போது வீடுகளின் உள் அளவுகள் கூடுதலாக இருப்பதால் கூடுதல் வாடகைக்குவிட வாய்ப்பு அமைகிறது.

ஆனால், இப்படி ஒட்டிக் கட்டுவதால் போதிய அளவு காற்றும் வெளிச்சமும் கிடைக்கும் வாய்ப்பு குறைகிறது. ஒரு புறம் மட்டுமே ஜன்னல்கள் அமைக்க வாய்ப்பு அமைவதால் காற்று உட்புகுந்து வெளியேறும்படியான வாய்ப்பு இல்லாமல் போகிறது.

மேலும், வீட்டின் திட்டத்தை வடிவமைக்கும்போதும் (PLANNING) கழிவறையை ஒட்டி அமைக்கும் திசையில் அமைக்க முடியாமல் மற்ற திசைகளில் மட்டுமே அமைக்க வேண்டியதாக உள்ளது. இதனால் வீட்டின் அமைப்பைத் திட்டமிடுவதிலும் சுதந்திரம் இழக்கிறோம்.

சில இடங்களில் ஓரத்தில் வெளிச்சம் வருவதற்காக OTS (OPEN TO SKY) என்கிற சூரிய ஒளி உட்புகும் வெளியை ஏற்படுத்த வேண்டிய தேவை அமைகிறது. இதைக் கட்டுவதிலும் பராமரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதுள்ளதை நாம் அறிய வேண்டும்.

ஒட்டிக் கட்டும் பகுதியில் நாம் வெளிப்புறப் பூச்சுவேலை செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது. எனவே, அந்தப் பகுதி சரியாகப் பராமரிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. மழை நீர் இடைவெளியில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சேர்ந்தால் அது அந்தச் சுவரைப் பலவீனமானதாக மாற்றி விடும்.

மேலும் நம் சுவரை ஒட்டி அடுத்த மனைக்காரரும் அவ்வாறு ஒட்டிக் கட்டினால் அவர் கட்டக்கூடிய வீட்டின் சுமை கீழிறங்கும் வகையில் ஏதேனும் குறையிருந்தால் அது நம்முடைய வீட்டைப் பாதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தொழில்நுட்ப கூறுகள்

இன்றைய சூழலில் பெரும்பாலும் நாம் காலம் பீம் அமைத்து FRAMED STRUCTURE வீடு கட்டுகிறோம். இப்படி ஒட்டிக் கட்டும்போது கான்கிரீட் தூணின் FOOTING எனும் தூணின் கீழ்ப் பகுதி தூணின் பாரத்தை அதன் மையத்தில் கொண்டிராமல் ஓராமாகக் கொண்டிருக்கும் வண்ணம் அமைகிறது. அவ்வாறு செய்யும்போது அதற்கென்று சிறப்புக் கவனம் எடுத்து வேறு வடிவத்தில் FOOTING அமைக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட நடைமுறை அறிவியல் தகவல்களைச் சரியான இன்ஜினீயர் ஒருவர் நமக்குச் செய்து தரலாம்.

ஆனால், ஒருவேளை நாம் இப்படிப்பட்ட அறிவியல் கூறுகளை அறியாவண்ணம் ஆட்களை வைத்து வீட்டு வேலை செய்தால் வீடு உறுதி இல்லாமல் போகும். மேலும், அருகில் அமையக்கூடிய வீட்டின் மொட்டை மாடியும் நம் வீட்டின் மொட்டை மாடியும் இடைவெளி இல்லாமல் ஒட்டி அமைய வாய்ப்பு உள்ளது. இதனால் பாதுகாப்புப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சுவர்களுக்கு வெளியே

வீடு என்பது நான்கு சுவர்களுக்கு உள்ளே உள்ள இடம் மட்டும் அல்ல. அதை ஒட்டி வெளிப்புறம் மனையில் விரியும் இடமும் ஒரு வீட்டின் தன்மையை உருவாக்குகிறது என்று சொல்லலாம். சுற்றி நடந்து வரவோ அல்லது செடி கொடிகள் மற்றும் பூச்சொடிகள் அமைக்கவோ வாய்ப்பு உள்ளது. அப்படி அமையப்படும் வீடு ஒரு புதிய அனுபவத்தை உருவாக்கும் இடமாக அமையும். அதற்கு ஏற்றாற்போல் சரியாக இடம் கொடுத்து நாம் வீட்டை வடிவமைத்தால் அந்த இடம் சிறக்கும்.

கட்டுரையாளர், கட்டுநர்

தொடர்புக்கு: senthil@honeybuilders.

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Any Queries