வெறும் சுவர் அல்ல 18: ராஜஸ்தான் மார்பிள்
மார்பிள் எப்படி உருவாகிறது?
கோடிக்கணக்கான ஆண்டுகளாக மண்ணுக்கு அடியில் ஆழத்தில் வெவ்வேறு தனிமங்கள் அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஆட்படும்போது அவை அழுத்தப்பட்டு, உருகி, உருக்குலைந்து, சுழன்று பின்பு குளிர்ந்து பாறைகளாக ஆகின்றன.
இந்தப் பாறைகள் உருவாக அடிப்படையாக உள்ள பொருட்களைப் பொறுத்து அதன் தன்மைகளான வண்ணம், வலிமை ஆகியவை அமைகின்றன. மார்பிள் பாறையின் அடிப்படையான மூலப்பொருள் சுண்ணாம்புக் கற்களே. ஆகையால்தான் மார்பிள் வெண்மையை ஒட்டிய நிறத்தில் இருக்கிறது. அதனோடு இணையும் வெவ்வேறு பொருட்களின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து வெண்ணிறப் பாறைகளினூடே வெவ்வேறு வண்ணங்களின் கீற்று அழகாக வெளிப்படுகிறது.
இந்தப் பாறைகள் பூமியின் ஆழத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்டுத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பின்பு அங்கு அந்தப் பாறைகள் பயன்படுத்தப்படும் அளவுக்கு ஏற்ப முறையாகத் துண்டு துண்டாக அறுக்கப்படுகின்றன. இந்தப் பாறைகளின் வலிமையைப் பொறுத்து அதன் அளவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் முக்கால் அங்குலம் (18 MM) அளவிலிருந்து தேவைக்கேற்ப கனம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அளவைவிடக் குறைவான கனத்தில் இருக்கும் கற்களைத் தவிர்ப்பது நல்லது.
கிஷன்கர் மார்பிள் சந்தை
ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கர்ட மார்பிள் சந்தை இந்தியாவிலேயே மிகப் பெரியது. கிட்டத்தட்ட 25,000 நிறுவனங்களுக்கு மேல் அங்கு உள்ளன. அனைத்தையும் சுற்றி வரவே நமக்கு ஒரு நாள் போதாது. அதிகமான வாய்ப்புகள், விதவிதமான வண்ணக்கலவைகள், அதீத விலை, மிக மலிவான விலை, ஏற்றுமதித் தரம் வாய்ந்த கற்கள் என்று பலவிதமான மார்பிள் கற்களை நாம் அங்கு பார்க்கலாம். 10,000 சதுர அடியோ அதற்குக் கூடுதலாகவோ தேவைப்பட்டால் அங்கே சென்று வாங்கிவருவது பொருளாதார அடிப்படையிலும் வாய்ப்பின் அடிப்படையிலும் சரியாக அமையும் என்பது என் கருத்து.
உலக அதிசயமான தாஜ்மஹால் முழுக்க முழுக்க மார்பிள் கற்களால் இழைத்துக் கட்டப்பட்ட ஓர் அற்புதம். அதன் பிரம்மாண்டத்தை அந்தப் பேரழகை நாம் நேரில் பார்த்தால் மட்டுமே உணர முடியும். நேரில் பார்க்கையில் நம்மை அசத்தி விடும் அபார அழகு கொண்ட கட்டிடம் தாஜ்மஹால். அதைப் போன்றே இந்த கிஷன்கர் மார்பிள் சந்தையும் நேரடியாகப் பார்த்து வியக்க வேண்டிய ஓரிடம் என்றே சொல்வேன்.
கிரானைட் கற்களை ஒப்பிடும்போது மார்பிள் கற்கள் துளைகள் மிகுந்தவை என்று சொல்ல முடியும். கடினத்தன்மை ஒப்புநோக்குகையில் குறைவானது. ஆகவே தான் நாம் மார்பிள் கற்களை நம் வீட்டில் பதித்தபிறகு பாலிஷ் செய்ய முடிகிறது. கிரானைட் கற்கள் கடினத்தன்மை மிகுந்தவை என்பதால் அவை தொழிற்சாலைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்டபின்பு அங்கேயே வழவழப்பாக இழைக்கப்பட்டுவிடுகின்றன. மார்பிள் கற்கள் இட்டு சில வருடங்களுக்குப் பின்பாக கூட நாம் மேலும் ஒரு முறை பாலிஷ் செய்து கொள்ள முடியும்.
கடினத்தன்மை குறைவாகவும் துளைத்தன்மையும் உள்ளமையால் மார்பிள் கற்களில் கறை படியும் வாய்ப்புகளும் அதிகம். இந்த நடைமுறை விஷயங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தரையைச் சுத்தம் செய்ய அமிலங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
கிரானைட் கற்களை ஒப்பிடும்போது இவை பொதுவாக குளிர்ச்சித்தன்மை கொண்டவை. வயதானவர்களுக்கு இதனால் கால்வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.
கிரானைட் கற்களைப் பதிக்கும் போது வெண்ணிற சிமெண்ட் பயன்படுத்துவது நல்லது. சாம்பல் நிறமான பரவலாகப் பயன்படுத்தக்கூடிய சிமெண்ட்டை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மார்பிள் கற்களில் உள்ள துளைத்தன்மையால் சிமெண்ட்டின் வண்ணம் பாறையில் புகுந்து மார்பிளின் வண்ணம் மாறிவிடும். நம் எண்ணப்படி வெண்ணிறமாக வாங்கிய மார்பிளின் வண்ணம் மாறிவிடும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
இத்தாலி மார்பிள்
இத்தாலி மார்பிள் கற்களுக்குப் பொதுவாகப் பெரிய வரவேற்பு உலகம் முழுக்க உள்ளது. நாம் முன்பே பார்த்தபடி கற்கள் உருவாகும் இடம் அந்தச் சூழ்நிலையைப் பொறுத்து அவற்றின் தன்மை இருக்கிறது. அங்கு உருவாகும் மார்பிள் கற்களின் வண்ணக்கலவைகள் சிறப்பானவை. எனினும், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு நாம் வீடு கட்டும் இடத்துக்கு அருகில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அமைப்பது சாலச்சிறந்தது.