வெறும் சுவர் அல்ல 20: வீடு கட்ட அடிப்படைத் தேவை எவை?
நமக்கே நமக்கென ஒரு சொந்த வீடு கட்டுவது என்பது இன்றைய வாழ்க்கைச் சூழலில் மிகவும் கடினமான ஒன்று. நம் சேமிப்பின் பெரும் பகுதியைச் செலவாக்குவது வீட்டைக் கட்டுவதற்காகத்தான். முறைப்படுத்தப்படாமல் இருக்கும் இந்தக் கட்டுமானத் துறையில் மிகுந்த கவனத்துடன் ஒப்பந்ததாரரை அடையாளம் கண்டு நம் வீட்டைக் கட்டி முடிப்பது சவாலான காரியம்தான். ‘வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்’ என்ற பழமொழி மிகவும் சரி என்பதை நாம் வீடு கட்டும்போது உணர்வோம்.
4 அடிப்படையான தேவைகள்
அடிப்படையில் வீடு கட்டத் தேவையானவை எவை என்பதைப் பகுத்து உணர்ந்து தெளிவதன் வாயிலாக நாம் அடுத்த கட்டத்துக்குள் நுழையலாம். ‘4 M’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். MONEY, MATERIAL, MANPOWER, AND MANAGER – பணம், வேலை செய்வதற்கான பொருட்கள், திறம்பட அந்தப் பொருட்களைக் கையாளும் வேலையாட்கள் மற்றும் இவற்றைச் சரிவரக் கையாளக்கூடிய தொழில்நுட்ப அறிவு மிகுந்த ஒரு மேலாளர் – இந்த நான்கும் சரிவர அமைந்துவிட்டால் நாம் பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டோம் என்று சொல்ல முடியும்.
பணம்
வீடு கட்டுவதாக நாம் முடிவெடுத்த பின்பு திட்டமிடுதலில் கவனமாக இருக்க வேண்டும். வீட்டின் வரைபடம் தெளிவாக உருவானால் மட்டுமே நாம் சரியாக வீட்டைக் கட்டி முடிக்க முடியும். அதைப் போல வீடு கட்டுவதற்கான மொத்தப் பணத்தேவை எவ்வளவு என்பதையும் அதை எப்படிப் பெறப்போகிறோம் என்பதையும் கவனமாகத் திட்டமிட வேண்டும். எவ்வளவு பணம் நம்முடைய சேமிப்பிலிருந்து வரப்போகிறது, வங்கியிலிருந்து வீட்டுக்கடன் எவ்வளவு பெறப்போகிறோம்? உறவினர்களிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ கடன் பெற வாய்ப்பிருக்கிறதா, ஆகிய கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
அதிகபட்சம் எவ்வளவு பணம் வீட்டுக்காகச் செலவு செய்ய நாம் தகுதியாக இருக்கிறோம் என்பதுதான் இங்குள்ள மிக முக்கியமான முடிவு. இந்த முடிவில் தடுமாறுபவர்கள் சரியான காலகட்டத்திலும் பிரச்சினை இல்லாமலும் வீடு கட்டி முடிக்க முடியாமல் திணறுகிறார்கள். பொதுவாக, 25 லட்ச ரூபாயில் வீடு கட்டுவது நம் சக்திக்குச் சரியாக இருக்கும் என்ற நிலையில் உள்ளவர்கள் பெரும்பாலும் 30 லட்சம் வரை வீடு கட்டத் திட்டமிடுவார்கள். அந்த மிச்சப் பணத்தை நாம் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி அந்த வேலை முடியாத பட்சத்தில் மிகவும் சிரமப் படுகிறார்கள். மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள்.
நம்முடைய வீடு நம் அந்தஸ்தாகப் பார்க்கப்படுகிறது. ஓர் உணர்வுபூர்வமான பந்தத்தை அந்த வீட்டின் மீது நாம் வைத்துக் கொள்கிறோம். மேலும் வீட்டு வேலை பாதியில் நின்று போனால் உறவினர்களும் நண்பர்களும் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமே இங்கு வெகு அதிகமானவர்களைப் பாதிக்கிறது.
அடுத்தவர்களின் பார்வையில் நாம் சரியானவராக, சிறப்பானவராக, புத்திசாலியாக அடையாளப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே நாம் நம்முடைய வாழ்வை நமக்காக வாழாமல் போகிறோம். இந்த வீடு கட்டும் பணியில் நம்முடைய தேவையை, நம்முடைய பணம் செலவழிக்கும் சக்திதான் முடிவு செய்ய வேண்டுமே ஒழிய நம்முடைய சுற்றத்தார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் அல்ல.
வீடு கட்டத் தொடங்கும் முன்பு ஒப்பந்ததாரரிடம் முறையாக ஒப்பந்தம் போடுகையில், ஒட்டு மொத்தமாக எவ்வளவு பணம் செலவாகும் என்பதைத் தெளிவாகப் பேசி எழுதிவைத்துக் கொள்வதும் முக்கியமே. எல்லா ஒப்பந்தங்களும் அப்படித்தானே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், வீட்டு வேலையைப் பொறுத்தவரை எந்தெந்த வேலைகள் எல்லாம் கூடுதலாக வரும் என்ற தெளிவான பார்வையை நாம் ஏற்படுத்தி அனைத்து வேலைகளுக்கும் ஆகும் செலவு எவ்வளவு என்பதை முன்பே தீர்மானிப்பது அவசியம்.
சதுர அடிக்கு இவ்வளவு என்ற அடிப்படையிலேயே இன்று வெகுவான கட்டுமான வேலைகள் நடைபெறுகின்றன. அந்தப் பணத்துக்குள் அடங்காத வேலைகள் என்னென்ன என்பதும் அவற்றுக்கு எவ்வளவு பணம் செலவாகும் என்பதும் வீட்டு உரிமையாளராக நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
திடீரென உருவாகும் பணத் தேவைகளால் சிரமப்படும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
எவ்வளவு கவனமாக இருப்பினும், நாம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம், நம்முடைய மாறும் தேவைகள் இவற்றுக்காக 5 முதல் 10 சதவீதம் கூடுதலாகப் பணம் செலவாகலாம் என்னும் முன்யோசனையுடன் வேலையைத் தொடங்குவது நல்லது. பண விஷயத்தில் நாம் சரியாக இருந்தால் ஒப்புக்கொண்ட கட்டுமான நிலைகளுக்கேற்ப நம் ஒப்பந்ததாரரிடம் பணம் கொடுக்கலாம். அப்படிச் செய்வதன் மூலம் நாம் நம் கடமையைச் சரிவரச் செய்த உணர்வைப் பெறலாம். நம்முடைய உரிமையையும் கோர முடியும். அடுத்த மூன்று தகவல்கள் குறித்து வரும் வாரங்களில் பேசுவோம்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com