யுடிஎஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது
நாம் ஒரு மனையைச் சொத்தாக வாங்கும்போது அந்த மனையைப் பற்றிய முழுமையான விவரங்கள் சொத்துப் பத்திரத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் அறிவோம்.
யாரிடமிருந்து வாங்குகிறோமோ அவர்களுடைய விவரம், நம்முடைய விவரம், சொத்தின் மதிப்பு, அந்த மனை அமைந்திருக்கும் இடம் குறித்த தெளிவான விவரம் ஆகியவை அந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மனையைப் பற்றிய விவரத்தில் அந்த மனை அமைந்திருக்கும் இடம், சர்வே எண், நான்கு எல்லைகள் அதாவது ஒவ்வொரு திசையிலும் மனையின் அளவு, ஒவ்வொரு திசையிலும் உள்ள அடுத்தவர்களின் சொத்து அல்லது சாலை ஆகியவை மிகத் தெளிவாக இடம்பெறும்.
ஆனால், ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் நமக்கென ஒரு வீடு வாங்கும்போது நம் வீட்டுக்குச் சொந்தமான மனையின் விவரத்தில் சரியாக எல்லைகளை வகுக்க இயலாத சூழல் உண்டு.
2,400 சதுர அடி மனையில் 5 வீடுகள் கட்டப்படுமேயானால் அந்த ஒட்டு மொத்த மனையின் அளவை 5 வீடுகளுக்குப் பிரித்துத் தர வேண்டும். அது எவ்வாறு பிரித்துத் தரப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.
யுடிஎஸ் – UDS என்பது என்ன?
பிரிக்கப்படாத மனையின் அளவு (UN DIVIDED SHARE) என்கிற சொற்றொடரின் சுருக்கக் குறியீடுதான் யுடிஎஸ் (UDS). பொதுவாகப் பிரித்துத் தரப்படுவதுதான் பங்கு. பிரிக்க முடியாத பங்குதான் யுடிஎஸ் என்று சொல்லப்படுகிறது.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நாம் வீடு வாங்கும் போது நம்முடைய வீடு எந்தத் தளத்திலும் இருக்கலாம். எத்தனையாவது மாடியில் இருந்தாலும் பொதுவாக நம் வீட்டின் அளவுக்கேற்ப அந்த ஒட்டுமொத்தக் குடியிருப்பு அமைந்த மனையின் பரப்பளவு விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
நாம் புரிந்துகொள்வதற்கு எளிதாக, ஒட்டு மொத்த மனையின் அளவு 1,000 சதுர அடி என்று வைத்துக் கொள்வோம். அந்த மனையில் நான்கு வீடுகள் அடுக்குமாடியாகக் கட்டப்படுவதாக வைத்துக் கொண்டால், அந்த நான்கு வீடுகளும் ஒரே சதுர அடிக் கணக்கில் அதாவது 400 சதுரஅடி அளவில் ஒரு தளத்தில் இரண்டு வீடு அடுத்த தளத்தில் இரண்டு வீடு என்று கட்டப்படுவதாக எடுத்துக் கொள்வோம்.
இந்தக் குடியிருப்பில் நான்கு வீட்டுக்கும் ஒரே அளவாக வீடு அமைந்திருப்பதால் இருக்கும் மொத்த மனையின் அளவை நான்கு சம பாகங்களாகப் பிரித்து, அதாவது 250 சதுர அடி நால்வருக்கும் எனப் பிரித்து, சொத்து எழுதப்படுகிறது.
அடுக்குமாடிக் குடியிருப்பில் நம் வீடு இருக்கும் சொத்துப் பத்திரத்தில் ஒட்டுமொத்த மனையின் நான்கு எல்லை விவரங்கள் இருக்கலாம். ஆனால், நம்முடைய வீடு கட்டப்பட்ட மனைக்கான விவரம் தனியே குறிப்பிடப்படாமல் பொதுவாக UDS இவ்வளவு சதுர அடி என்று குறிக்கப்பட்டிருக்கும். நம் அடுக்குமாடிக் குடியிருப்பு அமைந்த மனையில் நம் வீட்டின் பரப்பளவுக்கு ஏற்ப மனை அளவு பிரித்துத் தரப்படுகிறது.
எப்படிப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கலாம்?
வீட்டின் மதிப்பு இறங்குமுகமாகவும் மனையின் மதிப்பு ஏறுமுகமாகவும் இருக்கும் என்பது பொதுவான விதி. ஆகவே, கூடுதலாக UDS கிடைக்க வாய்ப்புள்ள குடியிருப்புகளில் வீடு வாங்குவது உகந்தது.
குறைந்த தளங்களைக் கொண்ட குடியிருப்பில் வீடுகள் வாங்கும்போது நமக்குக் கிடைக்கும் UDS அளவு ஒப்புநோக்கிப் பார்க்கும்போது கூடுதலாக இருக்கும். பின்பு எதிர்காலத்தில் அந்த மனையில் புதிதாக அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்படும்போது நமக்குக் கிடைக்கும் பங்கு கூடுதலாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.