வீட்டு அடித்தளம் – அறிய வேண்டியவை

பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து நாம் வீடு கட்டுகிறோம். நாம் கட்டும் கட்டிடத்தின் ஒட்டுமொத்தப் பாரமும் பூமி மீது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் முறைப்படி கடத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நம் வீடு அங்கங்கு விரிசலுடன் இருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

மிக உயரமான கட்டிடங்களுக்கும் பாலம் அமைக்கும் வேலையிலும் நீங்கள் இந்த வகை அடித்தளம் அமைப்பதைக் கண்டிருக்கலாம். நாம் கட்டும் கட்டிடத்தின் தன்மை, அதன் உயரம், ஒட்டு மொத்த எடை, நாம் கட்டிடம் கட்டும் மண்ணின் தன்மை ஆகிய அம்சங்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து அடித்தளத்தின் வகையைத் தீர்மானிக்கின்றன.
முறைப்படி கட்டுவதற்கான அடிப்படை பூமியில் நாம் அமைக்கும் அடித்தளத்தைப் (FOUNDATION) பொறுத்தே அமைகிறது. நாம் பொதுவாகப் பயன்படுத்தும் முறை ஓபன் பவுண்டேஷன் (OPEN FOUNDATION) என்று அழைக்கப்படுகிறது. இதன்படி நாம் மண்ணில் ஆறு அடி வரை குழி தோண்டி கம்பி கட்டி காலம் (COLUMN) அமைக்கிறோம்.

இங்கு கெட்டித்தரைப் பகுதி ஆறு அடி ஆழத்தில் கிடைத்து விட்டால் பரவாயில்லை. ஆனால், சில இடங்கள் களிமண் பூமியாக அமைந்துவிட்டால் கிட்டத்தட்ட பதினைந்து அடி ஆழம் வரை தோண்டினாலும் கெட்டித்தரை தென்படாது. அப்படிப்பட்ட இடங்களில் நாம் இந்த பைல் அடித்தளம் (PILE FOUNDATION) அமைக்கிறோம்.

பைல் (Pile) என்பது என்ன?

மண்ணில் 1 அடி முதல் 3 அடி வரை விட்டத்தில் (இது இன்னும் கூடவும் வாய்ப்புண்டு) தேவையான கெட்டித்தளம் கிடைக்கும் வரை துளையிட்டு, மண்ணை முழுக்க வெளியேற்றி, காலம் (COLUMN) அமைப்பைப் போன்று கம்பி கட்டி அந்தத் துளையில் ஊன்றி, பின்பு கம்பி வரைபடத்தில் தீர்மானிக்கப்பட்ட வரையறை கொண்ட கான்கிரீட் இடப்படுகிறது. இந்த அமைப்பே பைல் (PILE) என்று அழைக்கப்படுகிறது.
பைல் கேப் (Pile Cap) என்பது என்ன?

ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களோ இணைந்து ஒரு காலத்தைத் தாங்கும் வலிமை உள்ளவையாகக் கணக்கிடப்படுகின்றன. அந்த அடிப்படையில் பைல்கள் நிறுவப்படுகின்றன. பிறகு அந்த பைல்களை இணைத்து பைல் கேப் (PILE CAP) என்கிற மேல் மூடி அமைக்கப்படுகின்றது.
இந்த பைல் கேப்பில் இருந்து நமக்குத் தேவையான காலம் அமைக்கப்படுகின்றது. இந்த பைல் கேப்புக்காகக் கம்பி கட்டுவது மிகச் சரியாக வரைபடத்தில் உள்ளபடி பின்பற்றப்பட வேண்டும். அந்த வரைபடத்தைச் சரிவர உள்வாங்கிக் கட்டிடப் பொறியாளரின் மேற்பார்வையில் அமைக்க வேண்டும்.

ஏனெனில், இந்த பைல் கேப்பில்தான் ஒட்டுமொத்தமாகக் கட்டிடத்தைச் சுற்றி அமையக்கூடிய தரைமட்ட பீம், காலம் ஆகியவை அமையும். இந்த பைல் அடித்தள வேலையில் பைல் கேப் அமைப்பது முக்கியமான வேலை. இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அடித்தளம் எவ்வாறு அமைகிறது?

தரையில் அமைக்கப்படக்கூடிய பீம் (BEAM), பைல் கேப்களை இணைத்து அமைவதைப் பார்த்தோம். பிறகு அதன் மேல் செங்கல்லால் நாம் சுற்றுச்சுவர் கட்டி நம் வீட்டுக்குத் தேவையான அளவு உயரத்தில் அடித்தளத்தை (BASEMENT) அமைக்கிறோம்.

பைல் (Pile) அமைப்பில் கவனிக்க வேண்டியவை

பைல் அமைப்புக்காகக் கம்பி கட்டுவது வட்ட வடிவக் காலம் போன்று கட்டிவிடலாம். ஆனால், பைல் கேப்புக்காகக் கம்பி கட்டுவது மற்ற வேலைகளைப் போன்று எளிமையானது அல்ல. வரைபடத்தை முழுமையாக உள் வாங்கிக் கட்டிடப் பொறியாளரின் மேற்பார்வையில் சரிவர அமைக்க வேண்டும்.

மேலும், பைல் அமைந்த பின் அதன் மேற்பகுதியில் குறைந்தது இரண்டு அடி உயரம் வரை மண்ணானது கான்கிரீட்டுடன் இணைந்து இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். எனவே, அதை உடைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு உடைப்பதைக் கவனமாகச் செய்யவேண்டும். ஒட்டுமொத்த பைல் அமைப்பு சிதைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, வீட்டுக் கட்டுமானத்தில் பைல் கேப்கள் அனைத்தும் முடிந்தவரை ஒரே மட்டத்தில் இருக்கும்படி அமைக்கப்படுவது சிறப்பு. பைல் கேப்கள் மனையின் மேற்பகுதியில் அமைவதால் அவற்றுக்கு முறையான நீராட்டுதல் (CURING) செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

நடைமுறைச் சிக்கல்

பெரும்பாலும் கம்பி வரைபடம் இல்லாமல் கட்டிடம் கட்டும் வேலைகள் பரவலாக நடைபெறுவதை நாம் அறிவோம். ஆனால், இந்த பைல் அடித்தளத்தைப் பொறுத்தவரை அந்தத் தவறை செய்யவே கூடாது. களிமண் தரையாக இருந்தாலும் பரவாயில்லை அடித்தளத்தைச் சற்று ஆழத்தில் வைத்து சாதாரண அடித்தள அமைப்பில் காலம் அமைப்பதும் ஆங்காங்கே நடைபெறு கிறது. இதை முற்றிலும் தவிர்ப்பது வீட்டுக் கட்டுமானத்துக்கு நல்லது.

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Any Queries