வெறும் சுவர் அல்ல 12: கான்கிரீட்டில் எவ்வளவு தண்ணீர் ஊற்றலாம்?

கான்கிரீட்டின் அடிப்படைக் கூறுகள்

காலம், லிண்டல், மேற்கூரை ஆகிய வேலைகளுக்கு நாம் வேலை செய்யும் இடத்திலேயே கான்கிரீட் கலந்து பயன்படுத்துவது இயல்பாக அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. நாம் எல்லோரும் பொதுவாக சிமெண்ட் எவ்வளவு பயன்படுத்துப்படுகிறது என்பதை மட்டுமே கவனிக்கிறோம். மணல், ஜல்லியின் தரத்தையும் பயன்படுத்தப்பட வேண்டிய உரிய அளவுகளைப் பற்றியும் கடந்த வாரம் பார்த்தோம். கான்கிரீட் அதற்குரிய தரத்தை அதாவது உரிய வலிமையை அடைவதை உறுதி செய்யக்கூடிய முக்கியமான காரணி கான்கிரீட்டில் நாம் சேர்க்கும் நீரின் அளவு.

கான்கிரீட்டில் நீரின் வேலை என்ன?

சிமெண்ட், மணல், ஜல்லி ஆகியவற்றுடன் நீர் சரியான அளவு ஊற்றும்போது வேதிவினை நடைபெறுகிறது. வேதிவினையின் இறுதியில் ஒட்டும் தன்மையுள்ள ஒரு பசை உருவாகிறது. இந்தப் பசை, மணலையும் ஜல்லியையும் ஒன்றோடொன்று பிணைத்து வைக்கிறது. இந்த வேதிவினையில் சிமெண்ட், நீர் ஆகியவற்றின் மூலக்கூறுகள் பங்கு பெறுகின்றன. மணல், ஜல்லி ஆகியவற்றுக்கு இந்த வேதிவினையில் எந்த வேலையும் இல்லை.

இப்படி உருவாகும் பசையானது மணலையும் ஜல்லியையும் பலமாக இணைத்து வைத்துப் பாறையைப் போன்று பலம் பெற வைக்க முயல்கிறது. எந்த அளவு இந்த கான்கிரீட் வலிமையைடைய வேண்டும் என்பது நாம் பயன்படுத்தும் சிமெண்ட், தண்ணீர் ஆகியவற்றின் அளவைப் பொறுத்தது.

இந்த வேதிவினை நடைபெறுகையில் வேறுவிதமான பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் நாம் உப்புத்தன்மை அதிகமான நீரையோ மணலையோ பயன்படுத்துவதைத் தவிர்க்கிறோம். சாதம் சமைக்கும்போது தேவையான அளவைவிடக் கூடுதலாகவோ குறைவாகவோ நீர் சேர்த்தால் எப்படி நாம் எதிர்பார்த்த பதத்தில் சாதம் உருவாகுவதில்லையோ அதைப் போன்றே இவ்விடத்திலும் மாறுபாடுகள் ஏற்படும்.

 

நீரின் அளவு ஏன் முக்கியம்?

ஒவ்வொரு விதமான கலவை (MIX) விகிதங்களைப் பொறுத்து நீரின் அளவு சிமெண்ட் அளவைப் போன்று 40 முதல் 60 சதவீதம் வரை பயன்படுத்த வேண்டும். இந்தக் குறிப்பிட்ட அளவைவிடக் குறையும்போது வேதிவினை முழுமையாக நடைபெறுவதற்குத் தேவையான நீர் இல்லாமல் போகும். அதனால் பசை உருவாகுவதில் சிக்கல் ஏற்படும். நீர் அளவு அதிகமானால் மணல், ஜல்லி ஆகியவை நெருக்கமாக இல்லாமல் பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை SEGGREGATION என்று சொல்வார்கள். இப்படிப் பிரிந்துபோனால் உருவாகும் பசை தன் வேலையைச் செய்ய இயலாது.

பொதுவாக, வேலை செய்யும் இடத்தில் உருவாகும் தவறு என்னவென்றால் நீர் மிகுவதுதான். அதற்கான காரணம், கான்கிரீட்டை இடுவதற்கு அதன் இயங்குதன்மையை (WORKABILITY) அதிகப்படுத்தும் பார்வையே. கான்கிரீட் கலவை இளக்கமாக இருந்தால் அதை எடுத்துப் பயன்படுத்துவது மிக எளிது. ஆயினும், உரிய அளவைவிடக் கூடுதலாக நீர் பயன்படுத்தித்தான் அந்த நிலையை எட்ட வேண்டும் என்றால் அது தவறான போக்கு.

வேலை செய்யும் இடங்களில் நீங்கள் கவனித்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள் அப்போதுதான் சரியாக இருக்கும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு தேவையோ அதை மட்டுமே பயன்படுத்துவதை நாம் உறுதிப்படுத்துவது அவசியம்.

எவ்வளவுதான் நீர் ஊற்ற வேண்டும்?

கடந்த வாரத்தில் நாம் விவரித்த M20 என்ற விகிதத்தில் கான்கிரீட் கலப்பதாக நாம் எடுத்துக்கொள்வோம். 50 முதல் 60 சதவீதம் அதாவது 0.04 முதல் 0.06 என்கிற நீர், சிமெண்ட் விகிதம் (WATER CEMENT RATIO) ஏற்புடையது. நாம் முன்பே விவரித்தபடி நீர் பயன்படுத்தும் அளவு சிமெண்ட் அளவுக்கு ஏற்ப மாறும். வெவ்வேறு கலவை விகிதங்களுக்கு சிமெண்ட் அளவு மாறுவதைப் போன்றே நீரின் தேவையும் மாறும்.

எத்தனை லிட்டர் என எப்படிக் கணக்கிடுவது?

ஒரு மூட்டை சிமெண்ட் கொண்டு நாம் கலவை இயந்திரத்தில் கான்கிரீட் தயாரிப்பதாக எடுத்துக் கொள்வோம். M20 கலவை விகிதத்திற்கு சிமெண்ட்

அளவைப்போன்று 50 சதவீதம், நீர் சேர்க்க வேண்டும், ஒரு சிமெண்ட் மூட்டையில் உள்ள சிமெண்ட்டின் அளவு 50 கிலோகிராம். இதில் 50 சதவீதம் என்பது 25 கிலோகிராம். அதிக பட்சம் 60 சதவீதம் என்பது 30 கிலோகிராம். ஒரு லிட்டர் நீர் ஒரு கிலோகிராம். எனவே நாம் 25 முதல் 30 லிட்டருக்கு மிகாமல் நீர் சேர்க்கலாம்.

நீர் அளவு மாறினால் என்ன பிரச்சினை வரும்?

நீரின் அளவு குறையும் போது உரிய பசை உருவாகாமல் கான்கிரீட் உரிய வலிமை அடையாமல் போகும். நீரின் அளவு அதிகமானால் மூலப்பொருட்கள் பிரிவடைந்து கான்கிரீட்டில் துளைகள் ஏற்பட்டு அதன் உறுதித் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்ற வள்ளுவ வாக்கை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். நாம் எதிர்பார்த்த வலிமையை கான்கிரீட் அடைவதற்கு அடுத்த கட்ட முக்கியமான செயல்பாடு நீராட்டுதலாகும் (CURING). அதன் முக்கியத்துவத்தை அடுத்த கட்டுரையில் காண்போம்.

கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com

admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Translate »
Any Queries