வெறும் சுவர் அல்ல 21: கட்டுமானப் பொருட்களைத் தேர்வுசெய்வது எப்படி?
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளில் கடந்த வாரம் நாம் பணம் குறித்துப் பேசினோம். இன்று கட்டுமானப் பொருட்கள் குறித்துப் பேசலாம். நம்முடைய வீட்டின் தரம் நாம் பயன்படுத்தும் பொருட்களின் தரத்தைப் பொறுத்தது. கட்டுமானப் பொருட்களின் சந்தை மிகப் பெரியது. கம்பி, சிமெண்ட், மணல், ஜல்லி முதற்கொண்டு டைல்ஸ், பெயிண்ட் பொருட்கள் வரை விசாலமாக அனைத்துவிதப் பொருட்கள் குறித்தும் நாம் அடிப்படையான தகவல்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம்.
அனைவரும் அனைத்து விதமான தகவல்களிலும் வல்லுநராக இருக்க முடியாது. அதனால்தான் அரசாங்கம் தர முத்திரையைப் பயன்படுத்தி நமக்கு உதவுகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டிய தர நுணுக்கங்கள் குறித்த கட்டுப் பாடுகள் விதித்து அதன்படி சந்தையில் பொருட்கள் கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது. ISI முத்திரை உள்ள பொருட்களை வாங்கி பயன் படுத்துவது அடிப்படையில் நல்லது. தொழிற்சாலைகளில் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டுச் சந்தைக்கு வரும் பொருட்களை நாம் இந்த முத்திரைகளின் அடிப்படையில் தரம் பிரிக்கலாம்.
தர முத்திரை இல்லாத பொருட்கள்
கம்பி, சிமெண்ட் போன்ற பொருட்களில் நாம் தர முத்திரையைக் காண முடியும். ஆனால், மணல், ஜல்லி, செங்கல் போன்ற அடிப்படைப் பொருட்களுக்கு முறையான தரக் கட்டுப்பாடு அளவீடுகள் அனைவருக்கும் தெரியும்படி இல்லை.
இன்றைய சூழலில் ஆற்று மணலுக்குப் பதிலாக M SAND பயன்படுத்தலாம் என்ற விழிப்புணர்வு எல்லாத் தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டாலும், எது சரியான M SAND என்று நுகர்கோருக்குக் குழப்பம் வரும். ஏனெனில், அரசு விதித்த எம் சாண்டுக்கு உரிய தரக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத CRUSHER DUST போன்றவற்றை எம் சாண்ட் என்று சொல்லி விற்பதும் ஆங்காங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் இருந்து நுகர்வோர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியம். எம் சாண்ட் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அரசு சான்று வழங்கி உள்ளது. அப்படிப்பட்ட இடங்களில் இருந்து வாங்கிப் பயன்படுத்துவது சிறந்தது.
செங்கற்கள்
இதைப் போன்றே செங்கற்களும் பலவித தரத்தில் கிடைக்கின்றன. எப்படிப்பட்ட கற்களைத் தேர்வு செய்கிறோம் என்பது நம்மைப் பொறுத்ததுதான். நாட்டுச் செங்கற்கள், சேம்பர் செங்கற்கள் என்று விதவிதமாகக் கிடைக்கின்றன. மண் குழைத்துத் தயார் செய்யும்போது நன்கு அழுத்தப்பட்டு உள்ளே இடைவெளிகள் இல்லாமலும், சிறு கற்கள் கலக்காமல் மண் மட்டும் இருக்கும்படியும், நன்கு சுடப்பட்டும் செங்கற்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
அளவுகளும் சரியாக ஒரே மாதிரி அனைத்துக் கற்களிலும் பேணப்பட வேண்டும். அளவில் வித்தியாசம் இருந்தால் கட்டுவேலையில் பயன்படுத்தும்போது கூடுதலாக சிமெண்ட் கலவை தேவைப்படும். அது கூடுதல் செலவு மட்டுமல்லாமல் கட்டுவேலையின் தரத்துக்கும் உகந்தது அல்ல.
தீர்வு என்ன?
அரசு தரக் கட்டுப்பாட்டு முத்திரைகள் அளிக்க இயலாத இவை போன்ற பொருட்களின் தரத்தை நுகர்வோர் எவ்வாறு தெரிந்து கொள்வது, என்பதை நாம் அறிய வேண்டும். நாம் ரத்த மாதிரியைக் கொடுத்து நமக்குத் தேவையான கூறுகள் பற்றிச் சோதனை செய்வதைப் போல அனைத்து விதமான கட்டுமானப் பொருட்களின் தரத்தையும் நாம் பரிசோதனை செய்து தெரிந்துகொள்ள முடியும். இப்படிப் பரிசோதனை செய்யும் மையங்கள் பெரும்பாலும் அனைத்து நகரங்களிலும் உள்ளன.
கட்டுமானப் பொருட்கள் பரிசோதனை மையம் (CONSTRUCTION MATERIAL TESTING LAB) என்று நாம் கூகுள் தேடுபொறியில் தேடினால் இந்த மையங்கள் இருக்கும் இடங்களை அறிந்து கொள்ளலாம். அங்கே சென்று நமக்குத் தேவையான அனைத்துப் பொருட்களின் மாதிரியைக் கொடுத்து பரிசோதித்துக் கொள்ள முடியும். மரம் முதற்கொண்டு மார்பிள், கிரானைட் என்று அனைத்துவிதப் பொருட்களையும் பரிசோதித்துக் கொள்ள முடியும்.
விலை கூடுதலாக இருப்பது தரமா?
பொதுவாக, நம் மனத்தில் விலை அதிகமாக உள்ள பொருட்கள் தரம் நிறைந்தது என்ற எண்ணம் உள்ளது. அந்த எண்ணத்திலிருந்து நாம் வெளிவரலாம். சரியான விலையில் தரமான பொருட்களும் கிடைக்கின்றன. பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பாரம்பரியம், விளம்பரச் செலவு, பொருட்களை மையங்களுக்குக் கொண்டு வரும் பயணச் செலவு, மூலப்பொருட்களின் செலவு, லாப சதவீதம் என்று பலவிதக் காரணிகளின் அடிப்படையில் பொருட்களின் சந்தை விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேவையானவை எவை என்று அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது நம்முடைய கைகளில்தாம் உள்ளது.
ஒரே பொருள் வெவ்வேறு விலை
ஒரே பொருளுக்கு இருவேறு விலை சந்தையில் இருக்கும். நாம் உடனடியாகப் பணம் கொடுத்துப் பொருளை வாங்கினால் குறைந்த விலையில் பெறும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், அதிகமாக விற்பனை நடைபெறும் இடங்களில் பொதுவாக விலை சற்றுக் குறைவாக இருக்கலாம். எந்தப் பொருள்/எந்த நிறுவனத்தைச் சார்ந்தது என்று முடிவெடுத்த பின்பு அதன் சந்தை விலை நிலவரம் குறித்து நன்கு அலசி ஆராய்வது பலன் தரும்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com