கம்பியின் தரத்தை அறிவது எவ்வாறு
வீடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களில் முக்கியமானவை கம்பியும் சிமெண்ட்டும். நம்மில் பெரும்பாலானோர் சிமெண்ட் பற்றி அறிந்து கொண்ட அளவு கம்பியைப் பற்றி அறிந்ததில்லை. அழுத்தக்கூடிய விசையை கான்கிரீட் சமாளிப்பதைப் போல இழுக்கக்கூடிய விசையைக் கம்பி சமாளிக்கிறது.
இந்த அடிப்படையின்படி தேவையான அளவு உறுதித் தன்மையில் கான்கிரீட்டும் கம்பியும் கம்பி வரைபடத்தில் (STRUCTURAL DRAWING) கணக்கிடப்பட்டுக் காண்பிக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரையில் இன்றைய சூழலில் கம்பியை எந்த அடிப்படையில் நாம் வாங்க வேண்டும் எனப் பார்க்கலாம்.
டி.எம்.டி. கம்பிகள்
முன்பு நாம் முறுக்குக் கம்பிகளைக் கடைகளில் பார்த்திருக்கிறோம். இன்று அவை கிடைப்பதில்லை. அவற்றைவிடக் கூடுதல் நற்பண்புகளைக் கொண்ட புதிய தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்படும் டி.எம்.டி. (THERMO MECHANICALLY TREATED-TMT) கம்பிகள் கிடைக்கின்றன. இவை பல அறிவியல் அடிப்படைகளின்படி சிறந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்தக் கம்பிகள் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றைக் கவனித்து வாங்க வேண்டியது ஒரு நுகர்வோராக நம்முடைய கடமை. கம்பி தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களின் சந்தை நிலவரத்தைப் பொறுத்து கம்பி விலையை நிர்ணயிக்கிறது.
நமக்கு எது தேவை என்பதை அறிந்து உணர்ந்து அதன்படி வாங்க வேண்டியது நம்முடைய தெளிவு. வெறும் விளம்பரங்களைப் பார்த்து மட்டும் நாம் முடிவுகளை எடுக்க வேண்டாம்.
வலிமைக் குறியீடுகள்
கம்பியின் அடிப்படையான தரம் குறித்து சந்தையில் வெளிப் படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு இன்று கம்பியை Fe 500 / Fe 500 D / Fe 550 / Fe 550 D என்று பல விதங்களில் குறிப்பிடுகிறார்கள். இந்தக் குறியீடுகள் எவற்றை உணர்த்துகின்றன என்பதை நாம் அறிய வேண்டும். ஒவ்வொன்றாக நாம் பார்க்கலாம்.
Fe என்பது இரும்பு எனும் தனிமத்தின் அறிவியல் குறியீடு. ஒவ்வொரு தனிமத்துக்கும் இதைப் போன்று அறிவியல் குறியீடு உள்ளதைப் பள்ளியில் அறிவியல் படிக்கும் பிள்ளைகள் அறிவார்கள்.
அடுத்து உள்ள எண் அந்த கம்பியின் வலிமையைக் குறிக்கிறது. 500 அல்லது 550 என்பது மெகா பாஸ்கல் அல்லது N / SqMM என்கிற அறிவியல் அளவீட்டின் படியான எண்ணாகும். கம்பி தாங்கக்கூடிய சக்தியின் அளவு என்று நாம் இதை எடுத்துக்கொள்ளலாம்.
கம்பி கணக்கிடப்படுவது எவ்வாறு?
இந்த அடிப்படையைக் கொண்டுதான் ஒரு காலத்தில் (COLUMN) எந்த அளவு கம்பிகள் எத்தனை எண்ணிக்கையில் வேண்டும் என்பது கணக்கிடப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஒரு காலத்தில் இறங்கக்கூடிய பாரத்தைத் தாங்கும் வகையில் அந்த காலத்தின் அளவு, அதாவது கான்கிரீட் தேவைப்படும் அளவு, கம்பிகள் தேவைப்படும் அளவு ஆகியவை கணக்கிடப்படுகின்றன.
இந்த விஷயத்தை இங்கு வலியுறுத்திச் சொல்வது ஏனென்றால், எந்தவிதக் கணக்கிடுதலின் அடிப்படையில் உள்ள கம்பி வரைபடங்கள் இன்றி நாம் வீடு கட்டும் வேலையில் ஈடுபடுவது ஆபத்தானது என்பதை உணர்த்தத்தான். இன்று கட்டப்படும் வீடுகளில் 50 முதல் 60 சதவீதத்துக்கு மேலான இடங்களில் மக்களிடையே இது குறித்த விழிப்புணர்வு இல்லை.
தெரிந்தவர்களிடம் கேட்பது மற்றும் படித்தது, பார்த்தது என்ற அடிப்படையில் குத்துமதிப்பாகக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது அறிவியல்ரீதியாக வீட்டுக்கு உகந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.
இழுவைத்திறன்
இறுதியில் உள்ள D எனும் குறியீடு DUCTILITY என்கிற கம்பியின் இழுவைத்தன்மைக் குறித்தது என்பதை நாம் உணர வேண்டும். கம்பியில் பாஸ்பரஸ், சல்பர் ஆகிய தனிமங்கள் உள்ளன.
இவற்றின் அளவு குறையும்போது கம்பியின் இழுவைத்திறன் கூடுதலாக மேம்படும். எனவே, அவ்வாறு இந்தத் தனிமங்கள் குறைக்கப்பட்ட கம்பி D என்கிற இந்தக் குறியீட்டுடன் சந்தைக்கு வருகிறது.
இவற்றை எல்லாம் பார்த்துப் பார்த்து நாம் வாங்குவதற்கு நம்மிடையே கம்பி வரைபடம் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். அந்த வரைபடத்தில் கம்பியின் அடிப்படை வலிமை என்னவாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது என்கிற தெளிவான குறிப்பு இருக்கும். அந்த அடிப்படையில் நாம் முடிவுகளை எடுக்கலாம்.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@honeybuilders.