கட்டுமான வேலைக்கு பொறியாளர் அவசியமா
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர்.
வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல், நடைமுறை காரணங்களை ஒரு பொறியாளர் சரியாகத் தெரிந்துவைத்திருப்பார்.
அடிப்படைத் திட்டமிடல்
வீடு கட்டத் திட்டமிட்டு வரைபடம் தயாரிப்பதில் இருந்து தொழில்நுட்ப அறிவுள்ள ஒருவரின் உதவி நமக்கு தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து கம்பி வரைபடம் தயாரிப்பது, வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தை முடிவு செய்வது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகளிலேயே நம் வீடு ஏட்டளவில் முழு வடிவம் பெற்றுவிடுகிறது. ஆனால் இந்த அடிப்படை விஷயங்களை முழுமையாகத் தயார்செய்யாமல் பிறகு வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை ஆரம்பத்தில் இருந்தே நாம் பெற வேண்டியது முக்கியம்.
பெரும்பாலானோர் தங்களின் பொருளாதாரப் பலம் குறித்த முழுமையான தெளிவின்றி வீடு கட்டத் தொடங்கிவிட்டுப் பிறகு வருத்தப்படுகிறார்கள். அந்தத் தெளிவை நாம் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு இந்த அடிப்படைப் படம் தயாரித்தலிலேயே அடைய வேண்டும். எவ்வளவு செலவுக்குள் எப்படிப்பட்ட வீடு கட்டப்
போகிறோம் என்கிற சரியான தீர்க்கமான முடிவை நாம் ஆரம்பித்தில் கொண்டிருக்க வேண்டியது முக்கியம்.
மண் மற்றும் நீர் பரிசோதனை
மண்ணின் தாங்கும் திறன், நம் நிலத்தில் கிடைத்து நாம் பயன்படுத்தப் போகும் நீரின் தன்மை இவற்றைப் பரிசோதிப்பது மிகவும் அவசியம். மண்ணின் தன்மையைப் பொறுத்து அதன் தாங்கும் திறன் மாறுபடும். அதற்கேற்றவாறு நாம் அடிப்படைக் கட்டமைப்பு (FOUNDATION) செய்ய வேண்டும். கெட்டித்தரை, களிமண் பூமி, கடற்கரைக்கு அருகே உள்ள இடம் இப்படி இடத்துக்கு ஏற்றாற்போல கட்டுமான அஸ்திவாரங்கள் மாறுபடும் என்பது நமக்குத் தெரியும். அதற்கு அந்த மண்ணைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.
அவ்வாறே நம்முடைய ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கிடைக்கக்கூடிய நீரில் உள்ள உப்புத்தன்மை, அமிலத்தன்மை ஆகியவற்றைப் பரிசோதித்து அது கட்டுமான வேலைக்கு உகந்ததாக உள்ளதா என்பதை உணர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் எப்படிப்பட்ட மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல் நமக்கு வேண்டும்.
கட்டுமானப் பொருட்கள் குறித்த முடிவுகள்
வீட்டு வேலைகள் தொடங்கிய பிறகு ஒவ்வொரு நிலையிலும் பல வித்தியாசமான முடிவுகள் எடுக்க வேண்டும். தொழில்நுட்ப ரீதியில் சரியான கட்டுமான முறை உணர்ந்து செய்ய வேண்டியது அடிப்படையான ஒரு தேவை. ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுமானப் பொருட்களைத் தேர்வுசெய்ய வேண்டியதும் முக்கியமானது.
இன்று சந்தையில் ஒரே தேவைக்குப் பல நிறுவனங்களைச் சார்ந்த பொருட்கள் கிடைக்கின்றன. நம்முடைய தேவை என்ன, எப்படிப்பட்ட அடிப்படை விஷயங்களை அவை பூர்த்திசெய்ய வேண்டும், நம்முடைய பொருளாதாரச் சூழல் என்ன, தேவையான தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை எந்தப் பொருள் நிறைவேற்றுகிறது – என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்குப் பிறகுதான் நாம் அந்தப் பொருளை வாங்க வேண்டும். இந்தச் சூழலில் பொறியாளர் ஒருவரின் தேவை அவசியமானது.
வேலையாட்கள்
நாம் வேலைக்கென்று பணியமர்த்தும் பணியாட்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பதை நாம் முழுமையாகக் கவனிக்க இயலாது. எவ்வாறு வேலை செய்ய வேண்டுமோ அவ்வாறு முறையாக அவர்கள் செய்கிறார்களா, ஒரு நாளைக்கு அவர்கள் செய்து முடிக்க வேண்டிய அளவுக்கு வேலையைச் செய்து முடிக்கிறார்களா, பொருட்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வீணடிக்காமல் வேலை செய்கிறார்களா, நீராட்டுதல் உள்ளிட்ட தொடர் கண்காணிப்பு வேலைகளை எவ்வளவு தேவை என்பதை அறிந்து செய்கிறார்களா? – இது போன்ற பல கேள்விகள் உள்ளன.
நம்முடைய வேலையிலிருந்து நாம் முழுமையாக விட்டுவிலகி வீடு கட்டும் வேலையிலேயே நம்மை மூழ்கடித்துக் கொண்டிருக்க முடியாது. அந்தத் தொழில்நுட்பக் கூறுகள் பற்றி நாம் முழுமையாகவும் தெரிந்து செயலாற்றவும் முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இப்படி வீடு கட்டி அனுபவம் உள்ள ஒருவரிடம் நீங்கள் உரையாடினால் அவர் நமக்கு இன்னும் தெளிவாக சொல்லுவார்.
வீட்டு வேலைகள் ஆரம்பிக்கும் முன்பே இப்படிப்பட்ட முறையான வழிகாட்டுதல்கள் நமக்குத் தேவை. வீடு கட்டுவது நம் வாழ்வில் பெரும் பொருட்செலவு உள்ள ஒரு வேலை. எனவே முறையான வழிகாட்டுதல் நமக்குத் தேவை.
கட்டுரையாளர், கட்டுநர்
தொடர்புக்கு: senthil@s2swebtechnology.com